யாழில் திலீபன் நினைவேந்தலுக்குத் தடை கோரும் மனு தள்ளுபடி!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ். நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த இந்த வழக்கில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி க.சுகாஷ், இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழீழ விடுதலைப் புலிகளை நாங்கள் மீளுருவாக்கம் செய்யப் போவதாகக் குறிப்பிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பொலிஸாருடைய வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்ட்டுள்ளது.

தியாக தீபத்தினுடைய ஊர்திப் பவனிக்குத் தடை விதிக்க நீதிமன்றம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுத்திருக்கின்றது. ஏனெனில் எந்தவிதமான அடிப்படைகளும் இல்லாமல் பொலிஸார் தமிழீழ விடுதலைப் புலிகளை நாங்கள் மீளுருவாக்கம் செய்யப் போவதாக வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த வழக்கில் நாங்கள் ஒரு விடயத்தை எடுத்துக் காட்டியிருந்தோம். பொலிஸார் குறிப்பிடுவது போல் சிவப்பு, மஞ்சள் வர்ணங்களைப் பயன்படுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் தியாக தீபத்தின் ஊர்திப் பவனியைக் கொண்டு வருகின்றோம் என்பதற்காக நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யப் போகின்றோம் என்று அர்த்தப்படுத்த முடியாது.

சிவப்பு, மஞ்சள் வர்ணங்கள் இலங்கையிலே தடை செய்யப்பட்டிருக்கவில்லை. இலங்கையினுடைய தேசியக் கொடியில் கூட சிவப்பு, மஞ்சள் வர்ணங்கள் உள்ளன.

அப்படியெனில் இலங்கையினுடைய தேசியக் கொடியையும் அல்லவா நாங்கள் தடை செய்ய வேண்டும். ஆகவே, சிவப்பு, மஞ்சள் வர்ணங்களை நாங்கள் பயன்படுத்துகின்றோம் என்பதற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளை நாங்கள் நினைவு கூருகின்றோம், அவர்களை மீளுருவாக்கம் செய்யப் போகின்றோம் என்று அர்த்தம் கொள்ள முடியாது என நீதிமன்றத்திலே எடுத்து வாதிட்டிருந்தோம்.

உண்மையைச் சொல்லப் போனால் பொலிஸார் வெறும் கற்பனையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தியாக தீபத்தின் வழியில் இந்த ஊர்தி தொடர்ந்தும் பவனி வரும். இந்த வரலாற்று நிகழ்வை எதிர்கால சந்ததிக்குக் கடத்த மக்கள் எழுச்சியாக வருகை தர வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.