மீண்டெழுந்து வரும் நாட்டை மீளவும் படுகுழியில் தள்ளிவிடாதீர்கள்! – சமன் ரத்னப்பிரிய வேண்டுகோள்.

“இலங்கைக்குள் இனவாத மோதல்களை ஏற்படுத்தி தங்களது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள சில அரசியல் குழுக்கள் முயற்சித்து வருகின்றனர். உங்கள் அரசியல் நோக்கங்களுக்காக மீண்டெழுந்து வரும் நாட்டை மீண்டும் படுகுழியில் தள்ளிவிட முற்படாதீர்கள் என அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு ஜனாதிபதியின் தொழிற்சங்கத் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

முப்பது வருட யுத்தம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் விளைவாக நாடு அரசியல் பொருளாதார ரீதியில் சரிவடைந்து கிடந்த நிலையில், தற்போது ஓரளவு முன்னேற்றம் கண்டு வரும்போது நாட்டுக்குள் மீண்டும் இனவாத மோதல்கள் அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய நிலையை அறிவிக்கும் நோக்கில் சிவில் அமைப்புக்கள் கொழும்பில் நேற்று (22) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சில அரசியல் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகளில் தலையீடு செய்து வருகின்றனர்.

சனல் 4 விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்குள்ளும் சில தலையீடுகள் காணப்படுகின்றன. சில அரசியல் குழுக்கள் பல்வேறுபட்ட நிலைப்பாடுகளை முன்வைக்கின்றன. அது தொடர்பிலான சரியான விசாரணையை நடத்த அரசு முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் தலையீட்டின் கீழ் அது குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு அது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும்.

அதேபோல் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் நிறுவப்படவுள்ளது. அங்கு விருப்பமானவர்கள் சுதந்திரமாக தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியும். இருப்பினும் அந்தத் தகவல்களைச் சமூகமயப்படுத்தும் போது கவனமாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்பதோடு அது குறித்த விசாரணைகள் அவசியமில்லை என்று எவரும் வலியுறுத்தவில்லை.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தியது. அதனால் அதனை மேற்கொண்டவர்களைக் கண்டறிய வேண்டியது அவசியம். அதற்காக சர்வதேச ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதும் தவறாகாது.

சில குழுக்கள் நாட்டுக்குள் அரசியல் பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். குருந்தி விகாரை மற்றும் திலீபனின் நினைவு தின அனுஷ்டிப்பு உள்ளிட்ட விடயங்களில் அது தெரியவந்துள்ளது. அதனால் அரசியல் நோக்கங்களுக்காக மீண்டெழுந்து வரும் நாட்டை மீண்டும் படுகுழியில் தள்ளிவிட முற்படாதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் என்பன கசப்பான அனுபவங்களையே தந்தது. நாடு பொருளாதார ரீதியில் சற்று தலையெடுக்க ஆரம்பித்துள்ள வேளையில் அதற்குப் பாதகம் விளைவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.