திருமலையில் தடை உத்தரவை மீறி விகாரை கட்டும் பணி! (Photos)

திருகோணமலை, இலுப்பைக்குளத்தில் விகாரைக் கட்டுமானப் பணிகளுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் இரவு வேளைகளில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மக்கள் கூறுகின்றனர்.

கடந்த 25ஆம் திகதி இரவு சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பகுதியில் விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் தடை விதித்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மக்கள் அதிருப்தி வெளியிடுகின்றனர்.

அந்தப் பகுதியில் விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இம்மாதம் 3ஆம் திகதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்பின்னர் 9 ஆம் திகதி காலை மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அந்தப் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டிருந்தது.

சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் குறித்த விகாரை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், இந்தச் செயற்பாடானது இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.