வடக்கு – கிழக்கில் பூரண ஹர்த்தால் நடத்தத் தமிழ்க் கட்சிகள் தீர்மானம்!

வடக்கு – கிழக்கில் அடுத்த வாரத்தில் ஒரு நாளில் பூரண ஹர்த்தாலை நடத்தத் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகத் தீர்மானித்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிக்கும் வகையில் கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருமித்து சில தீர்மானங்களை எடுத்திருந்தன.

இதற்கமைய இவ்வாரம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கட்சிகள் நடத்தியிருந்தன. இதன் தொடராகவே வடக்கு – கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கும் அந்தக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ்ப்பாணத்தில் உள்ள இல்லத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஐனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இன்று ஒன்றுகூடி கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் வாரத்தின் ஒரு நாளில் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலை நடத்துவது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூட்டத்தின் முடிவில் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள், சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களுடனும் கலந்துரையாடி சகலரதும் ஆதரவையும் பெற்று இன்னும் சில நாட்களில் ஹர்த்தால் நடைபெறும் திகதி தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஹர்த்தால் தொடர்பில் முஸ்லிம் மக்களுடனும் பேசி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும், இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் மீண்டுமொரு தடவை ஒன்றுகூடிக் கலந்துரையாடி ஹர்த்தால் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் சிறிகாந்தா மேலும் தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஐனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், ரெலோவின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் எஸ்.கலையமுதன் மற்றும் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.