நான் எப்போதும் பலஸ்தீன மக்கள் பக்கமே! போர் தீர்வு அல்ல!! – அந்நாட்டுத் தூதுவருடனான சந்திப்பில் மஹிந்த தெரிவிப்பு.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் பலஸ்தீன மக்களுடன் ஐக்கியமாக நிற்கும் முகமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்துக்கு விஜயம் செய்தார்.

இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவருடனான கலந்துரையாடலின்போது, உலகில் எங்கும் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்றும், போர் தீர்வு அல்ல என்றும் மஹிந்த தெரிவித்தார்.

போரில் இலங்கையின் அனுபவங்களைக் குறிப்பிட்ட மஹிந்த, சமாதானத்தின் அவசரத்தை வலியுறுத்தினார்.

“பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் என்ற முறையில் நான் பலஸ்தீன நோக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றேன். போர் ஒரு தீர்வாகாது.” – என்று மஹிந்த மேலும் கூறினார்.

மஹிந்த, ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலும் இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரத்தில் பலஸ்தீனத்துக்கான ஆதரவையே வெளிப்படுத்தியிருந்தார்.

பலஸ்தீனத்துக்கு பத்து இலட்சம் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியையும் மஹிந்த 2014ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் வழங்கியிருந்தார்.

பலஸ்தீனத்தின் நீண்டகால ஆதரவாளராக மஹிந்த இருந்து வருவதோடு பலஸ்தீன கூட்டொருமைப்பாட்டுக்கான இலங்கை சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராகவும் அவர் செயற்படுகின்றார்.

பலஸ்தீனத்தை ஒரு தேசமாக 1988ஆம் ஆண்டு இலங்கை அங்கீகரித்ததுடன் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பலஸ்தீனத்தில் ‘மஹிந்த ராஜபக்ஷ வீதி’ என ஒரு வீதிக்கு பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.