காஸாவில் நடந்ததுதான் புதுக்குடியிருப்பிலும் நடந்தது! இரட்டை வேடம் போடாதீர்கள்!! – சபையில் சுமந்திரன் காட்டம்.

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாள்களுக்கு முன்னர் காஸா ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று இந்தச் சபையில் உரையாற்றினார். நானும் கூட அதைக் கண்டித்தேன். ஆனால், காஸா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சைக் கண்டித்த மைத்திரிபால சிறிசேன, புதுக்குடியிருப்பில் வைத்தியசாலை குண்டு வீசித் தாக்கப்பட்ட போது அச்சமயத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர், இதுவரை அதைக் கண்டிக்கவில்லை. இந்த நாடாளுமன்றத்தில் நடக்கின்ற இந்த விவாதத்திலேயே இந்தப் பாசாங்கு நடிப்புத்தனத்தை – அதன் உச்சத்தை – எங்களால் காண முடிகின்றது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன மோதல், பூகோள தாக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உலகின் மனச்சாட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு விடயம் பற்றி நான் இப்போது பேசுகின்றேன். இங்கு நான் பேசிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் கூட, மிக மோசமான வன்முறைகள், பேரழிவுகள், கண்மூடித்தனமான படுகொலைகள் ஆகியவற்றைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்துக்கான எங்கள் ஆதரவை வெளிப்படுத்தி நான் இந்த உரையைத் தொடங்குகின்றேன்.

அளவற்ற மனிதாபிமானப் பேரழிவு மிக மோசமாக ஏற்பட்டிருப்பது பற்றிய படங்கள், செய்திகளை நாம் நேரடியாக அவதானிக்கும் இந்நிலையில், நாங்கள் சிறிய நாடாக இருந்தாலும் அது தொடர்பில் நாம் அமைதியாகப் பார்த்திருக்க முடியாது. துயரதில் – துன்பத்தில் – மூழ்கியிருக்கும் அந்த மக்களுக்காக நாங்கள் கட்டாயம் குரல் எழுப்ப வேண்டும்.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான அரசியல் பிரச்சினை கடும் சிக்கலானது. அது எங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த அரசியல் பிரச்சினை தொடர்பாக இருதரப்பு நியாயங்களையோ அவர்களுடைய வாதங்கள் பற்றியோ நான் இங்கு எதுவும் பேசப் போவதில்லை. இது அதற்கான நேரமும் அல்ல. ஆனால், வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டிக்கவும், யுத்தத்தை மக்கள் மீது ஏவி விட்டுப் பேரழிவைத் தூண்டுவோரை அதை நிறுத்துமாறும், வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருமாறு நாங்கள் வற்புறுத்த வேண்டிய வேளை இது.

நீண்ட காலம் வன்முறைகள் திணிக்கப்பட்டமையால் தொடர்ந்து பேரழிவுகளையும் துன்பங்களையும் சந்தித்த ஒரு மக்கள் கூட்டத்தின் சார்பில் நான் இங்கு உரையாற்றுகின்றேன்.

வன்முறைகள் இழைக்கப்படும் போது அதை யார் செய்தார்கள் என்பது முதலில் முக்கிய விடயம் அல்ல. அத்தகைய நாசவேலை செய்கின்ற சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட வேண்டும். ஆனால், நான் இங்கு வலியுறுத்துவது முதலில் மக்களின் நெருக்கடிகள், சிக்கல்கள், துன்பங்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும், விரைந்து கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான்.

அந்த யுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தச் செய்ய வேண்டும்.

மக்கள் கூட்டத்தினர் அல்லது நாடுகள் தங்களுடைய வேறுபாடுகளை – முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள வன்முறையை நாடுகின்ற முறையில் செயற்படுவார்களானால் நாங்கள் ஒரு நாகரிக உலகத்தில் வாழ்பவர்கள் என்று எப்படிக் கூற முடியும்? அப்படிப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்கக் கூடும். இப்போதல்ல.

பிணக்குகள், முரண்பாடுகள் எவ்வளவு தீவிரமாக – மோசமாக – இருந்தாலும் அவை பேச்சு மூலம், இடை ஏற்பாட்டாளர்கள் மூலம், சமரச முயற்சிகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். வன்முறை மூலமோ, ஒருவரை ஒருவர் கொல்வதன் மூலமோ அல்ல. ஆனால், நாங்கள் பார்க்கும் உலகில் நிலைமை அப்படியல்ல. தொடர்ந்து வன்முறைகள் நீடிக்கின்றன. பல நாடுகளில் இத்தகைய வன்முறைகளும் யுத்தங்களும் தொடர்கின்றன. அதை நாங்கள் பார்க்கின்றோம். உக்ரைன் யுத்தம் பார்த்தோம். இப்போது மத்திய கிழக்கில் பார்க்கின்றோம்.

மத்திய கிழக்கில் இப்போது கட்டவிழும் விடயங்கள், 15 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுமார் மூன்று தசாப்த காலம் எங்கள் மீது கட்டவிழ்ந்த விடயங்களோடு எவ்வளவு தூரம் ஒன்றுபட்டவையாக – ஒரே மாதிரியாக – இருக்கின்றன என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனக்கு முன்னர் இங்கு பேசிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாள்களுக்கு முன்னர் காஸா ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து உரையாற்றினார். நானும் கூட அதைக் கண்டித்தேன். யார் அதற்குப் பொறுப்பு என்பதற்கு அப்பால், அதைக் கடந்து நாங்கள் கண்டித்தோம். அந்த வைத்தியசாலை தாக்கப்பட்ட போது ஒரு முக்கிய விடயம் இடம்பெற்றது. அந்த வைத்தியசாலை மனித கேடயமாகப் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேலினுடைய உத்தியோகபூர்வ பிரதிபலிப்பு உடனடியாக அமைந்தது. அத்தோடு பயங்கரவாதிகள் அங்கிருந்து தாக்குகின்றார்கள் என்றும் கூறப்பட்டது. இப்போது வேறு விதமான கருத்துக்களும் வெளிப்படுகின்றன. அந்தக் குண்டு வீச்சு இஸ்ரேலால் நடத்தப்படாமல் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது. ஆனால், எங்களுக்கு எதுவும் தெரியாது. யார் செய்தார்கள் என்பது முக்கியமல்ல. நான் இங்கு குறிப்பிட வருவது வேறு ஒரு விவகாரம்.

அத்தகைய சம்பவம் நடந்த கையோடு இஸ்ரேல் அரச கட்டமைப்பு அது மனித கேடயமாகப் பயன்படுத்தப்பட்டது என்ற விளக்கத்தை விழுந்தடித்துக் கொண்டு தரத் தயாராக இருந்தது. இவ்விடத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் என்ன நடந்தது என்பதை மறைத்து நாங்கள் தப்பி விட முடியாது. அதைத்தான் (இஸ்ரேல் அரசு இப்போது கூறியதைத்தான்) இங்கும் இந்த அரசும் கூறியது.

மத்திய கிழக்கில் இரண்டொரு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சைக் கண்டித்த மைத்திரிபால சிறிசேன, புதுக்குடியிருப்பில் வைத்தியசாலை குண்டு வீசித் தாக்கப்பட்ட போது அச்சமயத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர், இதுவரை அதைக் கண்டிக்கவில்லை.

இந்த நாடாளுமன்றத்தில் நடக்கின்ற இந்த விவாதத்திலேயே இந்தப் பாசாங்கு நடிப்புத்தனத்தை – அதன் உச்சத்தை – எங்களால் காண முடிகின்றது.

மத்திய கிழக்கில் இரண்டு தேசங்கள் என்ற தீர்வைப் பற்றி இங்கு – இந்த நாடாளுமன்றத்தில் – பலரும் பேசுகின்றார்கள். ஆனால் இங்கு – இந்த நாட்டில் – அவர்களுக்கு அந்த விடயம் வெறுக்கப்பட்ட விவகாரமாக இருக்கின்றது.

இங்கு அடுத்தடுத்து, வரிசையாகப் பேசிய ஒவ்வொருவரும் ஐ.நா. பற்றிக் குறிப்பிடுகின்றார்கள். இவ்விடயத்தில் ஐ.நா. தீர்மானங்கள் பற்றி வலியுறுத்துகிறார்கள். ஆனால், இங்கு – இந்த நாட்டில் – ஐ.நா. வரக்கூடாது, ஐ.நா. பங்களிப்புக்கு எதுவும் இல்லை, அதற்கு இடமில்லை என்று கூறுகின்றார்கள். ஐ.நா. தள்ளி நீக்க வேண்டும் என்று சத்தமிடுகின்றார்கள்.

இந்த விவாதத்தையொட்டி அரச பயங்கரவாதம் குறித்து கடுமையான கண்டனங்கள் இங்கு கூறப்படுகின்றன. நானும் எனது குரலை அவர்களோடு சேர்ந்து கண்டனத்துக்காக ஒலிக்கின்றேன். ஆம். அது அரச பயங்கரவாதம்தான். அப்படியானால் இங்கு என்ன நடந்தது? இங்கும் அதுதானே – அரச பயங்கரவாதம்தானே – நடைபெற்றது. அதுதான் இங்குள்ள பாசாங்குத்தனம். இரட்டை வேடப் போக்கு.

மக்கள் மீது – மக்கள் கூட்டத்தின் மீது – பெரும் எடுப்பில் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துபவர்களைக் கண்டிக்க வேண்டும். நான் முழுமையாகக் கண்டிக்கின்றேன். அது ஹமாஸாக இருந்தாலும், இஸ்ரேல் நாடாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டும்.

நீங்கள் ஒரு நாடாக, ஒரு நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாக இருந்தாலும் மக்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கு உங்களுக்கு – யாருக்கும் – உரிமை கிடையாது. உங்களுக்கு யாரும் அத்தகைய உரிமையைத் தரவில்லை. அத்தகைய தாக்குதலை நடத்துவதற்கான ஆயுதங்கள் உங்களிடம் இருக்கின்றன என்பதற்காக, நீங்கள் ஓர் அரசு என்பதற்காக, நீங்கள் அதற்கான ஆயுதங்களை சுவீகரிக்க முடியும் என்பதற்காக, ஏனைய நாடுகள் உங்களை பாதுகாக்கின்றன என்பதற்காக, எந்த நாடும் அல்லது எந்த நாடு அல்லாத ஒரு கட்டமைப்பும் கூட, இவ்வாறு மக்களைக் கொன்றொழிப்பதற்கு எந்த உரித்தும் கிடையாது.

இங்குதான் உங்களின் பாசாங்குத்தனம் – இரட்டை வேடம் – அம்பலப்படுத்தப்படுகின்றது. உங்கள் சொந்த நாட்டில் நடந்ததை மன்னிப்பது போல் அனுமதித்துக் கொண்டு, கண்டிக்காமல் இருந்தபடி, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் நடக்கும் இது போன்ற விடயத்தை நீங்கள் கண்டிப்பது வேடிக்கையானது. நீங்கள் அதை எவ்வாறு செய்ய முடியும்?

அப்படி விடயங்கள் நடப்பதற்கு நீங்கள் அவற்றை அனுமதித்தீர்கள். இடமளித்தீர்கள். அவற்றை மெச்சி கௌரவப்படுத்தினீர்கள் கொண்டாடினீர்கள். அதிலிருந்து பெருமிதம் கொண்டீர்கள். அதை ஒரு சீரியஸான விடயமாக நீங்கள் கருதவில்லை. இது இரட்டை வேடம். இரட்டை நாக்கு போக்கு.

மக்களினுடைய துயரங்கள், கஷ்டங்கள் நீக்கப்பட வேண்டும். இஸ்ரேல் – பலஸ்தீனப் பிணக்கு ஓர் அரசியல் பிரச்சினை. அது அரசியல் ரீதியாகவே தீர்க்கப்பட வேண்டும். ஏனைய நாடுகளில் உள்ள இதுபோன்ற பல பிணக்குகளும் அவ்வாறுதான் தீர்க்கப்பட வேண்டும். அவை நாடுகளுக்கு இடையிலான – மக்கள் கூட்டங்களுக்கு இடையிலான – அரசியல் பிணக்குகள், முரண்பாடுகள். அவை அரசியல் ரீதியாகத்தான் தீர்க்கப்பட வேண்டும்.
இலங்கையில் உள்ள பிணக்கும் ஓர் அரசியல் பிரச்சினைதான். அது அதுவும் அரசியல் ரீதியாகத்தான் தீர்க்கப்பட வேண்டும்.

அரசியல் பிரச்சினைக்கு இராணுவம் தீர்வு இல்லை என்று அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியமையை நாங்கள் செவிமடுத்தோம். இப்போது பலஸ்தீன – இஸ்ரேல் பிரச்சினையையொட்டி அவர் அதனைக் கூறுகின்றார். ஆனால், எங்கள் நாட்டில் ஓர் அரசியல் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வை முன்வைத்து, யுத்தத்தை ஏவி விட்டு, அதைக் கொண்டு நடத்திய ஜனாதிபதி அவர்தான்.

ஆகவே, இவ்வளவுக்குமாக நாட்டை மட்டும் நான் தனித்துக் குற்றம் சுமத்த விரும்பவில்லை.

நாகரிக உலகில் வன்முறைக்கும் பேரழிவுகளுக்கும் இடமில்லை. வன்முறையை யார் முன்னெடுத்தாலும் அவர்கள் முழு அளவில் – வெளிப்படையாகவே – கண்டிக்கப்பட வேண்டியவர்கள். கண்டிக்கப்பட வேண்டும்.

இன்று நாங்கள் துன்ப, துயரங்களை – நெருக்கடிகளை – எதிர்கொண்டிருக்கும் மக்களோடு எங்கள் உணர்வுகளை ஒன்றுபடுத்தி அவர்களுக்காக ஆதரவு தெரிவிக்கின்றோம்.

குழந்தைகளை, சிறுவர்களைக் கொன்றழித்து, மக்களை பழிவாங்குகின்ற இத்தகைய வன்முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை.

வன்முறையின் மோசமான விளைவுகளால் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்காக நாங்கள் குரல் எழுப்புவோம். வன்முறை ஹமாஸால் முன்னெடுக்கப்பட்டாலும், இஸ்ரேல் நாட்டால் முன்னெடுக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் குரல் எழுப்புவோம்.

மத்திய கிழக்கிலும் முழு உலகிலும் அமைதி நிலவ – சமாதானம் ஏற்படப் பிரார்த்திப்போம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.