ரவிராஜைக் கொலை செய்தவர் யார்? ஆதாரங்கள் விரைவில் அம்பலமாகும் – யாழில் வைத்து மனோ தெரிவிப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னநாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதும், கொலைக்கு உத்தரவிட்டது யார் என்பதும் சம்பந்தமாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (22) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் முன்னாள் செயலாளர் என்று சொல்லக் கூடிய ஆஸாத் மௌலானா உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மட்டுமல்லாமல் பல்வேறு விடயங்களைப் பகிரங்கமாக கூறியுள்ளார்.

அதில் அவர் கூறிய விடயங்கள் சம்பந்தமாக சனல் 4 வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ஆனால், அது உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விடயங்களுடன் வரையறுக்கப்பட்டிருந்தது.

இந்த உயிர்த்த ஞாயிறு திப் படுகொலை என்பது 2019 ஆம் ஆண்டு இடம்பெற்றது. ஆனால், கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் பல்வேறு கருத்துக்களையும் ஆஸாத் மௌலானா கூறியிருக்கின்றார்.

அந்தக் கருத்துக்கள் மூன்றாவது நபர் மூலமாக எனக்கும் வந்து சேர்ந்திருக்கின்றது. எனினும், அது சம்பந்தமான முழுமையான தகவல்கள் வரும் வரையில் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆனாலும், எனக்கு வந்திருக்கும் தகவலிலே நண்பர் ரவிராஜைக் கொலை செய்தது யார், கொலைக்கு உத்தரவிட்டது யார், அதிலும் முதல் உத்தரவு கடைசி உத்தரவு என இந்த உத்தரவுகளை பிறப்பித்தது யார் என்பது சம்பந்தமாக எல்லாம் சொல்லியிருக்கின்றார்.

ஆனாலும் இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தகவல்கள் வரும் வரையில் பொறுத்திருக்கின்றேன். அனைத்தும் வந்த பின்னர் முழுமையாக வெளிப்படுத்தத் தயாராகவுள்ளேன். இது தான் உண்மை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.