1 ரூபாய் சானிட்டரி நாப்கின் விற்பனையில் முதலிடம் பிடித்த உத்தரபிரதேசம்!

பிரதமரின் மலிவு விலை மருந்து திட்டத்தின் (PMBJP) கீழ் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு ரூ.1 விலையில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் உத்தரபிரதேச மாநிலம் அதிக பயனடைந்துள்ளதை பார்க்க முடிகிறது. ஜூன் 2018 முதல் செப்டம்ர் 2023 வரையிலான காலகட்டத்தில் ரூ.7 கோடி அளவுக்கு இந்த சுவைதா சானிட்டரி நாப்கின் விற்பனையாகியுள்ளது. அதற்கடுத்த இடத்தில் ரூ.6.36 கோடியுடன் குஜராத் மாநிலம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதற்கடுத்து முறையே கர்நாடகா (4.72 கோடி) மற்றும் ஜார்கண்ட் (3.19 கோடி) மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன.

இந்த மலிவு விலை சானிட்டரி நாப்கின் ஒரு ரூபாய் என்றாலும், ஐந்து அல்லது பத்து நாப்கினாக சேர்த்து மொத்தமாக பாக்கெட்டில் அடைத்து ஐந்து ரூபாயாகவோ அல்லது பத்து ரூபாயாகவோ விற்கப்படுகின்றன. விற்பனையின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது, மெட்ரோ நகரங்களைத் தாண்டியும் இந்த நாப்கினுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவகையில் எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ, அதை ஓரளவிற்கு பூர்த்தி செய்துள்ளது.

இந்த நாப்கினை விற்பனை செய்வதற்காக உத்தரபிரதேசத்தில் 1,500 கடைகளும், குஜராத்தில் 613 கடைகளும், கர்நாடகா மற்றும் கேரளாவில் 1000 கடைகளும் ஜார்கண்டில் 92 கடைகளும் உள்ளன. நாடு முழுவதும் உள்ள மலிவு விலை மருந்தகங்களில் பாதியளவு மூன்றாம் தர நகரங்களிலும் தாலுக்காவிலும் அமைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் விசேஷமான பரிசு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2018-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி இந்த மலிவு விலை சானிட்டரி நாப்கின் திட்டம் தொடங்கப்பட்டது. ‘தனித்துவமானது’ எனக் கூறப்படும் இந்த சானிட்டரி நாப்கினின் விலை மலிவாக இருப்பதோடு ஏழை பெண்களுக்கு சுகாதாரத்தை தருவதோடு, இதை அப்புறப்படுத்துவதும் எளிமையானது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்கள் இன்றும் சுகாதாரமற்ற முறையிலேயே மாதவிடாய் காலத்தை கழிக்கிறார்கள். ஏனென்றால் இப்போதும் கூட பல கிராமங்களில் உள்ள பெண்கள் விலை அதிகமாக இருக்கும் என்று சானிட்டரி நாப்கினை பயன்படுத்தாமல் பழைய ஆடைகளை, துணிகளை பயன்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. இதனால் அவர்களுக்கு பூஞ்சை தொற்று ஏற்பட்டு சிறுநீர் பாதையில் தொற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது. ஆகவே பெண்களுக்கு சுகாதார வசதிகளை குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதே இந்த திட்டம். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இந்த மலிவு விலை சானிட்டரி நாப்கின் விற்பனையகத்தை பத்தாயிரத்திலிருந்து 25,000-ஆக உயர்த்த மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த சானிட்டரி நாப்கினின் பயன்பாடு குறித்து தொலைக்காட்சி விளம்பரங்கள், டிஜிட்டல் திரை விளம்பரங்கள் மட்டுமின்றி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சோசியல் மீடியா வழியாகவும் விளம்பரம் செய்து வருகிறது மத்திய அரசாங்கம்.

Leave A Reply

Your email address will not be published.