‘என் சாதியைப் பத்திக் கேட்கறான்’ – பிக் பாஸ் வீட்டுக்குள் எழுந்த குற்றச்சாட்டு?

ரவீனாவுடன் மணி பழகுவது ஐஷூவிற்குப் பிடிக்கவில்லை. நிக்சனுடன் ரவீனா பேசுவது மணிக்குப் பிடிக்கவில்லை. காதில் புகை வருகிறது.

கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் நாமினேஷன் பட்டியல் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கிறது. பதினோரு நபர்கள் பலி பீடத்தில் இருக்கிறார்கள். பெரிய வீட்டார் தாங்கள் திட்டமிட்டதைச் சரியாகச் செயல்படுத்தி சின்ன வீட்டில் உள்ள அனைவரையும் நாமினேஷனில் கொண்டு வந்து வி்ட்டார்கள். இந்த வாரம் வினுஷா தப்பிப்பாரா? யாருடைய தலை
‘யார் மூர்க்கமான சண்டைக்கோழி என்பதில் விஷ்ணுவிற்கும் பிரதீப்பிற்கும் இடையே கடுமையான போட்டி நடக்கிறது. விஷ்ணு வெறுமனே கோபத்தைக் காட்டும் அதே சமயத்தில் பிரதீப்பிற்கு இதை எங்கே உயர்த்தி, எங்கே தாழ்த்தி ஆட வேண்டும் என்கிற சூட்சுமம் தெரிந்திருக்கிறது. மற்றவர்களின் ஈகோவை எளிதில் தூண்டி விட்டு குளிர் காய்கிறார்.
ரவீனா – மணி – ஐஷூ – நிக்சன் என்கிற நுட்பமான உறவுச் சங்கிலியின் இடையே உள்ள ரொமான்டிக் உரசல்கள் கூர்மையடைந்திருக்கின்றன. இது என்றாவது பெரிதாக வெடிக்கலாம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
இதுவரை மற்றவர்களை கவனித்திருக்கிற விதத்தில், அவர்கள் வேறு எந்தத் தொழிலுக்கு சரிப்பட்டு வருவார்கள் என்பதை யூகித்து கேப்டன் பூர்ணிமா சொல்ல வேண்டும். இந்தத் தேர்வுப் பட்டியலில் பூர்ணிமாவின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அப்பட்டமாகத் தெரிந்ததால் மக்கள் அதிருப்தியடைந்தார்கள். ‘சிறந்த டிஷ் வாஷர்’ என்பதை விஷ்ணுவிற்கும் ‘துணி மடிக்கும் வேலையை’ விசித்ராவிற்கும் ‘மந்திரவாதியை’ மாயாவிற்கும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ என்பதை ஐஷூவிற்கும் ‘டாக்டர்’ என்பதை ஜோவிகாவிற்கும் ‘கேம் ஷோ டைரக்டர்’ என்பதை பிரதீப்பிற்கும் ‘ஜிங்சக் பிளேயர்’ என்பதை மணிக்கும் தந்தார் பூர்ணிமா. இதில் மணி மீது அவருக்குள்ள வெறுப்பு வெளிப்படையாக இருந்தது.

‘பூர்ணிமாவோட மைண்ட்ல நாம எப்படி பதிவாகியிருக்கோம்ன்னு இதன் மூலமா தெரியும்’ என்று இந்த டாஸ்க்கின் தாத்பர்யம் பற்றி விசித்ரா சொல்லிக் கொண்டிருந்தார். விசித்ராவின் பேச்சில் வர வர முதிர்ச்சி தெரிகிறது. இப்போதுதான் பிக் பாஸ் ஆட்டத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

பிறகு பூர்ணிமாவை அழைத்த விசித்ரா “ஜிங்சக்’லாம் புரொஃபஷன் கிடையாது. இது ரொம்ப பர்சனலா போயிட்டுது.. யாரையும் ஹர்ட் பண்ணக்கூடாது” என்று ஆட்சேபித்தது சரியான விஷயம். ‘அதுக்காக மானே.. தேனே போட்டு பொய்யா சொல்ல முடியும்?’ என்று பூர்ணிமா சொன்னதும் ஒரு நோக்கில் சரிதான். பிக் பாஸ் வீட்டில் மிக சம்பிரதாயமாக பேசினால் கவனத்திற்கு உள்ளாக மாட்டார்கள். ஏதாவதொரு கலகத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும். தங்களுக்கு தரப்பட்ட ‘ஆல்டர்நேடிவ் தொழில்’ பற்றி விஷ்ணுவிற்கும் ஐஷூவிற்கும் கூட அதிருப்தி இருக்கிறது.

போட்டியாளர்களை சபையில் ஒன்று திரட்டிய பிக் பாஸ் ஒரு முக்கியமான அதிர்ச்சி வைத்தியத்தை அளித்தார். இந்த சீசனின் முதல் ‘ஓப்பன் நாமினேஷன்’. கேப்டன் பூர்ணிமாவை நாமினேட் செய்ய முடியாது. அக்ஷயாவும் விஷ்ணுவும் ஏற்கெனவே நேரடியாக நாமினேட் ஆகியிருக்கிறார்கள். எனவே மீதமுள்ளவர்கள் மீதுதான் குத்த முடியும்.

முதலில் எழுந்த விஷ்ணு, பிரதீப்பை நாமினேட் செய்து விட்டு அதற்கான காரணங்களை காரசாரமாக அடுக்க ஆரம்பித்தார். “விசித்ராவோட வயசுக்கு கூட மரியாதை தராம ஒருமைல பேசறான்.. ‘பிச்சையெடுத்து சாப்பிடுங்க’ன்னு சொல்றான்.. அவங்களையே டார்கெட் பண்றான். தன்னையே பிக் பாஸா நெனச்சுக்கறான்”.. என்று ஆவேசமாக புகார் சொன்னார். இது தொடர்பாக விஷ்ணுவிற்கும் பிரதீ்ப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நாமினேஷன் சடங்கு முடிவதற்கு முன்பாகவே இவா்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். வீட்டின் கேப்டனான பூர்ணிமா இதில் தலையிட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ‘விஷ்ணு.. உக்காருங்க’ என்று பிக் பாஸே அதட்டி சொல்ல வேண்டியிருந்தது. ‘நான் பாட்டுக்கு செவனேன்னுதாண்டா உக்காந்துக்கிட்டு இருக்கேன். கவுரவம்.. கவுரவம்ன்னு சொல்லி உங்க சண்டைல என்னையேண்டா அநாவசியமா கோர்த்து விட்டு இன்னமும் அசிங்கப்பட வெக்கறீங்க’ என்பது மாதிரியே பார்த்துக்கொண்டிருந்தார் விசித்ரா.

நிக்சனை நாமினேட் செய்யும் போது ‘கேப்டன்சி வாக்குறுதியை அவர் சொன்ன விதம் டிக்டேட்டர்ஷிப் மாதிரி இருந்தது’ என்று விஷ்ணு குறிப்பிட்ட காரணம் சரியானது. கடந்த இரு வாரங்களில் அந்தந்த கேப்டன்கள் தங்களின் அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்தாத விஷயம் நிக்சனுக்குள் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தனக்கு ஒரு வாய்ப்பு தந்தால் அதைக் கறாராகச் செயல்படுத்தி வீட்டை சரியாக நிர்வகிப்பேன் என்று அவர் நினைப்பது சரியான விஷயம். ஆனால் பிரசாரத்தின் போது சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விட்டார்.

சுரேஷ் தன்னுடைய நாமினேஷனின் போது ‘பெண் தலைமை வரணும்ன்றதை நிக்சன் விரும்பலை. பெண் என்றால் இளக்காரமா.. ஏன் அவங்க வரக்கூடாதா?’ என்றெல்லாம் திடீரென்று ‘பெண்ணியம்’ பேசிய போது ‘பார்றா’ என்று ஆச்சரியமாக இருந்தது. ‘பெண்களை நான் குறைவா சொல்லல.. இந்த ஆட்டத்தில் பாலின பேதம் வேணாம்.. அனைவரும் சமம்ன்னுதான் சொல்ல வந்தேன்” என்று பிறகு நிக்சன் தந்த விளக்கம் ஒருவகையில் சரியானதுதான்.

‘வினுஷா இன்னமும் கேமிற்குள் வரலை’ என்று பலரும் வரிசையாக சொன்ன போது அவர் அடிபட்ட முகத்துடன் அனைவரையும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். விசித்ரா பேசும்போது ‘நாமினேட் பண்றேன்’ என்பதற்குப் பதிலாக ‘டாமினேட் பண்றேன்’ என்று வாய் தவறி (உண்மையைச்) சொன்னதை பிரதீப் நக்கலாக சுட்டிக் காட்டிய விதம் குறும்பானது.
பிரதீப் தன்னுடைய நாமினேஷனின் போது “ஐஷூ முகத்தில் முடி வந்து மூடினதால அவங்க எமோஷனை புரிஞ்சுக்க முடியலைன்னு சுரேஷ் சொன்னது சரியானதல்ல. அவங்க கிட்ட இருக்கற விஷயம் உங்க கிட்ட இல்லைன்றது உங்க பிரச்சினை’ என்பது போல் பேசி சுரேஷின் தலைமுடியில் சர்காஸ்டிக் ஊசியை செருக, ‘பாடி ஷேமிங் பண்றான் சார்.. கமல் சார் இதைத் தட்டிக் கேட்கணும்” என்று சிரிப்பும் சீரியஸூமாக ஆட்சேபித்தார் சுரேஷ்.

`ஆக்சுவலி.. பிக் பாஸ் சாப்பாடு கொடுத்ததே முதலில் தப்பு. அதை வெச்சு நான் ஒரு கேம் ஆடலாம்ன்னு இருந்தேன். அவரு சொதப்பிட்டாரு’ என்று தன் மீதே பிரதீப் புகார் சொல்வதைக் கேட்கும் போது ‘யாரு சாமி.. இவன்?’ என்று பிக் பாஸ் உள்ளுக்குள் ஜெர்க் ஆகியிருப்பார். விட்டால் அவரையே பிரதீப் நாமினேட் செய்வார் போலிருக்கிறது.

ஈகோ உரசல்களும் ரத்தப் பிறாண்டல்களுமாக இந்த நாமினேஷன் சடங்கு ஒருவழியாக முடிந்தது. முன்பெல்லாம் விவித்பாரதி வானொலியில், இந்தப் பாடலை விரும்பிக் கேட்ட நேயர்கள், ‘அயனாவரம் பாலு, கோடம்பாக்கம் கோபு’ என்று ஒரு பெரிய பட்டியலை வாசிப்பார்கள். அதைப் போலவே இந்த நாமினேஷன் பட்டியலும் இருந்தது. பிரதீப், நிக்சன், யுகேந்திரன், ஜோவிகா, மணி, அக்ஷயா, சுரேஷ், வினுஷா, விக்ரம், மாயா மற்றும் விஷ்ணு.

மணிக்கும் மாயாவிற்கும் இடையே உள்ள அப்பட்டமான வெறுப்பு வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. ‘மணி ஒரு பிற்போக்குவாதி. என் கண்ணைப் பார்த்தே பேச மாட்டேன்றான்’ என்றெல்லாம் தொடர்ந்து புகார் சொல்லிக் கொண்டிருந்தார் மாயா. இன்று அதற்கான காரணங்களில் ஒன்று வெளியானது. ‘என் சாதியைப் பத்தி கேட்கறான்.. எவ்வளவு பெரிய தப்பு.. அது கூட ஓகே.. அதுக்கு அப்புறம் என் கூட வந்து பேசவேயில்ல..பயப்படறான்’ என்றெல்லாம் மாயா சொல்லிக் கொண்டிருந்தார்.
`முதல் நாள் சாப்பிடும் போது அவங்க நான்-வெஜ் எடுத்துக்கலை. அதனால அவங்க கேஸ்ட் பத்தி சாதாரணமா கேட்டேன். அவ்வளவுதான்’ என்று ஜோவிகாவிடம் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் மணி. இதை மாயாவிடமே அவர் நேரடியாகப் பேசியிருக்கலாம். ஒருவர் என்ன சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து கொள்ள முயற்சிப்பதும், அதற்கேற்ப தன் விருப்பு, வெறுப்புகளை அமைத்துக் கொள்வதும் கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம்.

இந்த வாரத்திற்கான ஷாப்பிங் தொடங்கியது. பூர்ணிமாவும் விஷ்ணுவும் சென்றார்கள். காஷ்பேக் ஆஃ.பர், கிரெட்டிட் கார்ட் சலுகை என்று சூப்பர் மார்கெட்டில் மக்கள் வாங்கிக் குவிப்பதைப் போல இவர்களும் கூடை வழிய வழிய அநாவசியமான பொருட்களை எடுத்து நிரப்பினார்கள். அவசியமான பொருளைத் தவற விட்டார்கள். ‘பஸ்ஸர்’ அடித்த பிறகுதான் தெரிந்தது, ‘கொத்தமல்லி’ எடுக்கவில்லை. காய்கறிக் கடைகளில் கொசுறு கேட்க நிற்பவரைப் போல ‘பிக் பாஸ்.. அத மட்டும் எடுத்துக்கட்டுமா?’ என்று விஷ்ணு தயங்கி கெஞ்சிக் கேட்க “ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை முதலில் எடுக்கத் தெரிஞ்சுதுல.. கெளம்புங்க” என்று விஷ்ணுவை பங்கப்படுத்தித் துரத்தி வெளியே அனுப்பினார் பிக் பாஸ்.

வீட்டை சுத்தம் செய்யும் பணிக்கான டாஸ்க் தொடங்கியது. இதில் கலந்துகொள்ளும் இருவர்தான் அடுத்த ஆட்டத்திலும் ஆட வேண்டும் என்கிற சின்ன ட்விஸ்ட்டை வைத்தார் பிக் பாஸ். உட்கார்ந்து கொண்டே ஆடும் கால்பந்து போட்டி. ஒத்தையடிப் பாதை மாதிரி இருக்கிற முட்டுச்சந்திற்குள் கால்பந்து போட்டியை யோசித்த அந்த மூளையை ஒலிம்பிக் குழுவில் சேர்க்கலாம். பூர்ணிமா நடுவராக இருக்க, இருவரும் ஆடத் துவங்கினார். ‘உட்கார்ந்து’ ஆட வேண்டிய விளையாட்டை, கோல் போடும் ஆவேசத்தில் இவர்கள் ஏறத்தாழ படுத்துக் கொண்டே ஆடியது அநியாயம். ‘இப்படி விதி மீறி ஆடினால் கோல் என்று அறிவிக்க மாட்டேன்’ நடுவர் கறாராகச் சொல்லியிருக்க வேண்டும்.

இந்த ஆட்டத்தில் மணி வெற்றி. ‘நீங்க சீட்டிங் பண்ணீங்க’ என்று மணி வைத்த குற்றச்சாட்டை பூர்ணிமா மறுத்தார். ஆனால் சின்ன வீடு முழுவதும் நடுவரின் அநீதியை கண்டித்து ‘கேப்டன் டவுன்..டவுன்’ என்று கத்தியது. நெருக்கடியான சூழலில் முடிவு எடுக்க வேண்டிய நிலைமையை பூர்ணிமா விளக்கியவுடன் பிறகு மன்னிப்பு கேட்டார்கள். ஆக. இந்த டாஸ்க்கில் சின்ன வீடு வெற்றி. எனவே பெரிய வீட்டார் சுத்தம் செய்ய வேண்டும். மணியின் வெற்றியை பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவீனா குதித்துக் கும்மாளமிட்டு கொண்டாடியதெல்லாம் சிறுபிள்ளைத்தனம். கோல் சர்ச்சை தொடர்பான உரையாடல் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போது ‘யார் வேணா பேசட்டும்.. அந்த மஞ்ச சட்டைக்காரர் பேச வேண்டாம்ன்னு சொல்லுங்க’ என்று யுகேந்திரனை ரகசியமாக கிண்டலடித்துக் கொண்டிருந்தார் மாயா.

பாத்ரூம் சுத்தம் செய்யும் டாஸ்க். அதே போட்டியாளர்கள் மீண்டும் மோதத் தொடங்கினார்கள். கறைகளைக் கொண்ட டைல்ஸ்களை யார் முதலில் சுத்தம் செய்கிறார்ளோ, அவர் வெற்றியாளர். முன்பு மணியிடம் தோற்றதை எப்படியாவது ஈடு செய்ய வேண்டும் என்கிற ஆவேசத்தில் செயல்பட்டு துடைக்கத் தொடங்கினார் விஷ்ணு.
மேலும் பாத்திரம் கழுவி கழுவி அதில் ஒரு பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸே அவருக்கு வந்து விட்டது. எனவே விஷ்ணு வெற்றி. வெற்றி பெற்ற ஆவேசத்தில் பக்கெட்டை அவர் தூக்கி எறிய அது இரண்டாக உடைந்தது. (பிக் பாஸ் வீட்டில் எல்லோமே சீப்பாக ஆன்லைனில் வாங்கிய பொருட்களாக இருக்கிறது!).

ஆக.. இந்த டாஸ்க்கில் பெரிய வீடு வெற்றி. ‘துடைக்கப் போவது யாரு..’ என்று வழக்கம் போல் பாடி கமலின் பாட்டை களங்கப்படுத்தினார்கள். இந்த ஆட்டத்தின் விதியில் ஒரு லாஜிக் பிழை இருக்கிறது. எவர் வேகமாக கறையை சுத்தம் செய்கிறாரோ, அவர்தான் பாத்ரூமையும் நன்றாக சுத்தம் செய்ய முடியும். ஆனால் அவரை வெற்றியாளராக அறிவித்து பணியிலிருந்து விடுவிப்பது முரண். (நாங்களே ரூம் போட்டு யோசித்து டிசைன் டிசைனா ஏதோவொரு கேமை பிளான் பண்ணா.. இவிய்ங்க இம்சை வேற’ – பிக் பாஸ் டீமின் மைண்ட் வாய்ஸ்!).

மணி – ரவீனா – ஐஷூ – நிக்சன் என்கிற நான்கு முனைகளில் ஒரு சுவாரசியமான கண்ணாமூச்சி ஆட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது. சற்று நிதானித்து உன்னிப்பாக வாசியுங்கள். ரவீனாவுடன் மணி பழகுவது ஐஷூவிற்குப் பிடிக்கவில்லை. நிக்சனுடன் ரவீனா பேசுவது மணிக்குப் பிடிக்கவில்லை. காதில் புகை வருகிறது. ஐஷூவுடன் ஒரு டிராக்கை மெயின்டெயின் செய்ய நிக்சன் முயன்று வருகிறார். அதை ஆட்சேபிப்பது போல் பாவனை செய்து ஊதி வளர்க்கிறார் ஐஷூ. அதன் மூலம் ரவீனாவை வெறுப்பேற்றலாம் என்பது அவரது பிளானாக இருக்கலாம். (ஏதாவது புரிகிறதா?!)

‘நான் உன் கூட செல்ஃபிஷாதான் பழகறேன்’ன்னு நிக்சன் சொல்றான்… எனக்கு கோபமா வருது… அவன் கூட பேச மாட்டேன்’ என்று சிணுங்குகிறார் ஐஷூ. இவர்களின் நடுவில் மாயாவின் தூது வேறு. ‘நான் அதை சும்மாதான் சொன்னேன்’ என்று ஐஷூவை ஓரங்கட்டி நிக்சன் பிறகு விளக்கம் தருகிறார். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது துணி காயப் போடும் சாக்கில் வேண்டுமென்றே அந்த ஏரியாவில் உலவுகிறார் ரவீனா. பின்குறிப்பாக ‘கிகிகி’ என்று சிரிக்கிறார். இது ஐஷூவின் மனதைக் காயப்படுத்துகிறது. தான் நேரடியாக ரவீனாவை ஆட்சேபித்தால் பிரச்சினையாகி விடும் என்று நிக்சனை விட்டு சொல்லச் சொல்கிறார்.

ரவீனாவிடம் நிக்சன் இது தொடர்பாக பேசி `யம்மா.. தாயி.. நீ ஐஷூவ காண்டாக்க டிரை பண்றது புரியுது.. ஆனா அது என்னையும் பாதிக்கும். அதனால என் விஷயத்துல எதுவும் பண்ணாத’ என்று கெஞ்ச ரவீனாவும் அதற்கு ஒப்புக் கொண்டு நிக்சனின் கன்னத்தை செல்லமாகக் கிள்ளி விடைபெறுகிறார். நிக்சனுடன் ரவீனா குசுகுசுவென்று ரகசியம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து மணிக்குக் காதில் ரயில் இன்ஜின் மாதிரி புகை வருகிறது. கால் மாற்றி நின்று தவிக்கிறார். அந்தப் புகையில் பெட்ரோல் ஊற்றுவது மாதிரி ‘அது என் பர்சனல். மேட்டர். யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்’ என்று ரவீனா வந்து சொல்ல, `நீ யாருடனும் இங்க எமோஷனலா கனெக்ட் ஆகாத’ என்று அதே பல்லவியை மீண்டும் மணி பாட ஆரம்பிக்க, பிக் பாஸ் வீட்டின் டிரான்ஸ்பார்மருக்கே இது பொறுக்காமல் வெடிக்க கரண்ட் கட். எபிசோடு நிறைகிறது.

‘தென்னமரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்து’ என்கிற மாதிரி இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை திறமையாக ஆடுபவர், வெள்ளந்தியான முகத்தை வைத்துக் கொண்டுள்ள ரவீனாதான். ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் லைலாவின் முகத்தை இமிடேட் செய்து விவேக் சொல்வார். ‘இப்படி.. இப்படி மூஞ்சை வெச்சிக்கிட்டு ஏமாத்திட்டாடா’ என்று. ரவீனாவும் இதையே கில்லாடித்தனமாக செய்கிறாரா?

Leave A Reply

Your email address will not be published.