கனடாவுக்கான விசா சேவையை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது இந்தியா..

கனடா உடனான உறவில் ஏற்பட்ட விரிசல் மீண்டும் சரியாகும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வர விரும்புவோருக்கான 4 வகை விசா சேவைகள் இன்று முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. என்ட்ரி விசா,வணிக பயன்பாட்டு விசா,மருத்துவம் மற்றும் கான்பரன்ஸ் ஆகிய 4 வகை விசா சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட இருக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் ஆதரவாளர் கனடாவில் கொல்லப்பட்டதற்கு இந்திய தூதரக அதிகாரிகளும் காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தேகம் தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்வினையாற்றியது. கனடாவில் இயங்கி வரும் பிரிவினைவாத சக்திகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை விசா சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது.

கனடா குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில் 41 தூதரக அதிகாரிகள் வெளியேற இந்தியா கெடு விதித்திருந்தது. இதன்படியே 41 அதிகாரிகளை கனடா அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. இதற்கிடையே, கனடாவில் உள்ள பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்த பின்னர் விசா சேவையை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக மிகமோசமான நிலையை எட்டியிருந்த தூதரக உறவுகளை சீரமைக்கும் வகையில் விசா வழங்கும் நடைமுறை இன்று முதல் தொடங்கப்பட உள்ளதால் விரிசல் விழுந்த உறவு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.