இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை.. அரையிறுதி வாய்ப்பு இருக்கிறதா?

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்ட போட்டி பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் அட்கிஸ்டன், ரீஸ் டாப்லி மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் நீக்கப்பட்டார்கள். இவர்களுடைய இடத்தில் மொயின் அலி, லிவிங்ஸ்டன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் மூவரும் இடம் பெற்றார்கள். இலங்கை தரப்பில் அனுபவ வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் இடம்பெற்றார்.

இந்தமுறை இங்கிலாந்து அணி கொஞ்சம் நம்பிக்கையுடன் எடுத்ததும் தாக்குதலில் ஈடுபட்டது. ஆனாலும் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. மேத்யூஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மெண்டிஸ் இடம் 28 ரன்களில் கேட்ச் கொடுத்து டேவிட் மலான் ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து ஜோ ரூட் துரதிஷ்டவசமாக 3 ரன்களில் ரன் அவுட் ஆனார். இது தொடர்ந்து இன்னுமொரு துவக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஒரு முனையில் பென் ஸ்டோக்ஸ் போராட மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன் கள் அனைவரும் வரிசையாக வெளியேற ஆரம்பித்தார்கள். மொத்தமாக 10 விக்கெட்டுகளை 111 ரன்களுக்கு கடைசியாக கொடுத்து, 156 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டம் இழந்தது.

இங்கிலாந்து அணியின் தரப்பில் இதற்கு அடுத்து பென் ஸ்டோக்ஸ் 43, கேப்டன் ஜோஸ் பட்லர் 8, லியாம் லிவிங்ஸ்டன் 1, மொயின் அலி 15, கிறிஸ் வோக்ஸ் 0, டேவிட் வில்லி 14*, ஆதில் ரஷீத் 2, மார்க் வுட் 5 என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தார்கள்.

லகிரு குமாரா மூன்று விக்கெட்டுகள், ஆஞ்சலோ மேத்யூஸ் மற்றும் ரஜிதா இரண்டு விக்கெட்டுகள், தீக்ஷனா ஒரு விக்கெட் என கைப்பற்றினார்கள். இரண்டு ரன் அவுட்டுகள் இங்கிலாந்து தரப்பில் நடைபெற்றது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குசால் பெரேரா 4, கேப்டன் குஷால் மெண்டிஸ் 11 ரன்கள் என விரைவில் வெளியேற, ஒரு சிறு நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்காவுடன் சதீரா சமரவிக்ரமா ஜோடி சேர்ந்து, மிகவும் பொறுப்பான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தி, இருவரும் அரைசதம் அடித்து அணியின் வெற்றியை எளிதாக்கினார்கள்.

இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 25.4 ஓவரில் இலக்கை எட்ட வைத்து இலங்கை அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. பதும் நிஷாங்கா 77(83), சதீரா சமரவிக்ரமா 65(54) ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்கள். டேவிட் வில்லி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

ஐந்தாவது போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு இது நான்காவது தோல்வியாகும். நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பு முடிந்து விட்டது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க இந்த மூன்றில் ஒரு அணி தொடர்ச்சியாகத் தோல்விகளை தழுவினால், அதே சமயத்தில் இங்கிலாந்து நல்ல ரன் ரேட்டில் மீதம் இருக்கும் நான்கு போட்டிகளையும் வென்றால், ஒரு சிறு வாய்ப்பு அரைஇறுதிக்கு இருக்கிறது. ஆனால் இது மிகக் கடினம். தற்போது எட்டாவது இடத்தில் இருந்து இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு சரிந்திருக்கிறது!

Leave A Reply

Your email address will not be published.