தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்கள்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை

அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள தமிழகத்தின் 86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. அந்த இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியே நடத்துகிறது.

அதன்படி, 4 சுற்றுகள் நடைபெற்ற அகில இந்திய கலந்தாய்வு முடிவில் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள், நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் 50 இடங்கள், மாநில அரசின் கலந்தாய்வு முடிவில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்கள் (நிா்வாக ஒதுக்கீடு) என மொத்தம் 86 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாகவுள்ளன.

மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காலியாகவுள்ள இடங்கள் தமிழகத்துக்கு திருப்பி அளிக்கப்படாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் 86 எம்பிபிஎஸ் இடங்களும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களைத் திருப்பி அளிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. எனவே, அடுத்தகட்டமாக அந்த இடங்களைத் திரும்பப் பெற்று மாணவா் சோ்க்கை நடத்த அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

Leave A Reply

Your email address will not be published.