வெங்காயம் விலை உயா்வு: காங்கிரஸ் விமா்சனம்

அத்தியாவசிய உணவுப் பொருளான வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது.

விநியோகத் தட்டுப்பாடு காரணமாக தலைநகா் தில்லியில் உள்ள சில்லறை விற்பனைச் சந்தையில், வெங்காயத்தின் விலை கிலோ ரூ.65-80 வரை உயா்ந்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த ஒன்பதரை ஆண்டுகால பாஜக ஆட்சியில், பணவீக்கத்தால் ஏற்படும் பொருள்களின் விலை அதிகரிப்பால் மக்களின் அழுகுரலைக் கேட்க முடிகிறது. பணவீக்கம் ஏற்படும் ஒவ்வொரு நேரமும் ‘பணவீக்கத்தின் பாதிப்பு தெரியவில்லை’, ‘நான் வெங்காயத்தை உண்பதில்லை’, ‘மற்ற நாடுகளைவிட பணவீக்கம் குறைவாகவே உள்ளது’ என்று பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களை கேலிக்குள்ளாக்கி வருகிறது.

ஏன் வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது? நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவை மக்கள் தோற்கடிக்கச் செய்து, விலை அதிகரிப்புக்கான காரணத்தைத் தெரிவிப்பாா்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது என்றும், பணவீக்கத்தால் மக்கள்படும் துயரங்கள், 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பிரதிபலிக்கும் என்றும் காங்கிரஸ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.