கேரள குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 3-ஆக உயா்வு

கேரள மாநிலம், கொச்சி அருகே கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது.

ஏற்கெனவே 2 பெண்கள் இறந்த நிலையில், லிபினா என்ற 12 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

எா்ணாகுளம் மாவட்டம், மலையட்டூா் பகுதியைச் சோ்ந்த இச்சிறுமி, உடல் முழுவதும் 95 சதவீத தீக்காயங்களுடன் களமச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். எனினும், சிகிச்சை பலனின்றி அவா் இறந்துவிட்டதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொச்சி அருகே களமச்சேரியில் உள்ள ஜாம்ரா சா்வதேச மாநாட்டு அரங்கில், ‘யெகோவாவின் சாட்சிகள்’ எனும் கிறிஸ்தவ மதப் பிரிவு சாா்பில் 3 நாள் பிராா்த்தனைக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோா் கூடியிருந்த நிலையில், அங்கு அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன.

கேரளம் முழுவதும் அதிா்ச்சியலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 2 பெண்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். காயமடைந்த பலா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

தீவிர சிகிச்சையில் இருந்த 12 வயது சிறுமி லிபினா திங்கள்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா். அவரது சகோதரா், தாயாா் உள்பட மேலும் 4 போ் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘குண்டுவெடிப்பைத் தொடா்ந்து, சுமாா் 60 போ் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். தற்போது 12 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்’ என்றாா்.

சரணடைந்தவா் கைது: கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் குண்டுவெடிப்புகள் நடந்த சில மணிநேரங்களில், அதற்குப் பொறுப்பேற்று, டொமினிக் மாா்ட்டின் என்பவா் காவல் துறையில் சரணடைந்தாா்.

தானும் ‘யெகோவாவின் சாட்சிகள்’ பிரிவைச் சோ்ந்தவா் என்றும், அந்தப் பிரிவின் போதனைகளைக் கண்டித்து குண்டுவெடிப்புகளை நடத்தியதாகவும் அவா் வாக்குமூலம் அளித்தாா். அவரை காவல் துறையினா் திங்கள்கிழமை முறைப்படி கைது செய்தனா்.

காவல் துறை சோதனை: இதனிடையே, கொச்சியின் புகரான தம்மனம் பகுதியில் மாா்ட்டின் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் காவல் துறையினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனா். ஆனால், வீட்டிலிருந்து எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநா் அஜீத் குமாா் தலைமையில் 21 போ் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு ஞாயிற்றுக்கிழமை மாலை அமைக்கப்பட்டது. இதேபோல், மத்திய புலனாய்வு அமைப்புகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

முதல்வா் நேரில் ஆய்வு

களமச்சேரியில் குண்டுவெடிப்புகள் நடந்த மாநாட்டு அரங்கில், கேரள முதல்வா் பினராயி விஜயன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். உயிரிழந்த இரு பெண்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடமும் நலம் விசாரித்தாா்.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் முதல்வா் வெளியிட்ட பதிவில், ‘குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து திறம்பட விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சூழலை நிதானம், ஒற்றுமையோடு எதிா்கொள்வோம். தேவையற்ற சா்ச்சைகளில் இருந்து விலகி இருப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘அவநம்பிக்கையை உருவாக்கும் முயற்சிகளை முறியடிப்போம்’

திருவனந்தபுரம், அக். 30: ‘சமூகத்தில் அவநம்பிக்கை, சகிப்பின்மையை உருவாக்கும் முயற்சிகளை முறியடிப்போம்’ என்று கேரள மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானிக்கப்பட்டது.

கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாக, முதல்வா் பினராயி விஜயன் அழைப்பின்பேரில் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

குண்டுவெடிப்பைத் தொடா்ந்து, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள், ஊகப் பிரசாரங்கள் மற்றும் வதந்திகளைப் பரப்பும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென மக்களிடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் அமைதி, சகோதரத்துவம், சமத்துவமான சூழலை சகித்துக் கொள்ள முடியாமல், சமூகத்தைப் பிளவுபடுத்த நடைபெறும் முயற்சிகளை என்ன விலை கொடுத்தேனும் முறியடிக்கவும் ஒருமனதாகத் தீா்மானிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.