தமிழர்களின் நலனில் இந்தியா முழு அக்கறை – விரைந்து தீர்வு கிடைக்கக் கடும் அழுத்தம் வேண்டும் என்றும் சம்பந்தன் வலியுறுத்து.

“இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் நலனில் இந்திய மத்திய அரசு முழுமையான அக்கறை செலுத்தியுள்ளது. உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதனை நாம் வரவேற்கின்றோம். அதேபோல், இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு விரைந்து கிடைக்க நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.

‘மலையகம் – 200’ நிகழ்வில் பங்கேற்க கொழும்பு வந்த இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வடக்கு – கிழக்குக்கும் வந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ள நிலையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் தீர்வு விவகாரத்தில் ராஜபக்ஷ அரசு போல் ரணில் அரசும் வாக்குறுதிகளை மாத்திரம் வழங்குகின்றது. ஆனால், செயல் வடிவில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும்.

தமிழர்களின் கோரிக்கைகள் என்ன, அவர்கள் விரும்பம் தீர்வு என்ன ஆகிய விடயங்களை இந்தியாவின் மோடி அரசிடம் நாம் ஏற்கனவே எடுத்துரைத்து விட்டோம். எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் மோடி அரசு, இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.