பாகிஸ்தான் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மியான்வலி விமானப்படை தளத்தின் மீது இன்று (சனிக்கிழமை) வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ராணுவத்தினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் விமானப்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவ.4ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் விமான படைக்குச் சொந்தமான மியான்வலியில் உள்ள விமான பயிற்சி தளம் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானது. ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழு ஒன்று இந்தத் தாக்குதலை நடத்தியது. இந்தத்தாக்குதல் ராணுவத்தினரின் சரியான பதிலடியால் முறியடிக்கப்பட்டது.

மேலும் விமானதளத்தில் உள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த சொத்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தக்க சமயத்தில் ராணுவத்தினர் நடத்திய துணிச்சலான எதிர்தாக்குதலால் தீவிரவாதிகளில் விமான நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாகவே அவர்களில் 3 பேர் கொல்லப்பட்டனர். மூன்று பேர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தாக்குதலால் விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று விமானங்கள் சேதமடைந்துள்ளன. எரிபொருள் டேங்கரும் பாதிப்படைந்துள்ளது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட தெஹ்ரீக் -இ-ஜிஹாத் பாகிஸ்தான் (டிஜெபி) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தத்தாக்குதல் குறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.