ரணிலை இனிமேல் வீழ்த்தவே முடியாது! – அசோக சூளுரை.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இனிமேல் எவராலும் வீழ்த்த முடியாது. சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினரின் பொய் பித்தலாட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது.”

இவ்வாறு பொது நிர்வாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பொருட்களின் விலைகளைக் குறைப்பதன் ஊடாக நாட்டு மக்களுக்கு சுமுகமான சூழலொன்றை உருவாக்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சம்பள அதிகரிப்பால் மாத்திரம் அதற்குத் தீர்வு காண முடியாது என்றும், அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் சுமுகமான நிலைமை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

“மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் புதிய வருமான வழிமுறைகளை உருவாக்க கூடியதுமான வரவு – செலவுத் திட்டம் ஒன்றும் முன்மொழியப்பட்டுள்ளது. அது தொடர்பிலான பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.

குறிப்பாக பிரதமரின் கீழுள்ள பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க அரசாங்க ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சம்பள அதிகரிப்பால் மாத்திரம் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது. கொவிட் பரவல் காலத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு சிறிதளவும் சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை என்பதாலேயே தற்போது சம்பள அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு கல்வித் திட்டத்தை விஸ்தரிக்கும் நோக்கில் 4 புதிய பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, தடைப்பட்டு கிடக்கும் வீதி நிர்மாண பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களை மறைத்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தரப்பினரால் கிரிக்கெட் தொடர்பிலான விடயங்கள் குறித்த கலந்துரையாடல்கள் ஏற்படுத்தப்படுகின்றமை கவலைக்குரியது. இருப்பினும் அரச தரப்பினர் அந்தத் தவறுகளைச் செய்யவில்லை.

அதேபோல், அரசின் வரி வருமானம் பெப்ரவரி மாதத்திலேயே சேகரிக்கப்படும் என்பதாலேயே பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களின் அரச வருமானத்தை கொண்டு ஏப்ரல் மாத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக நாட்டின் ஏனைய மக்களுக்கும் நிவாரணம் கிடைக்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக அரசு வழங்கும் சலுகைகளை வியாபாரச் சமூகம் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.

அத்தோடு இம்முறை முன்மொழியப்பட்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அடுத்த வருடத்தின் பெப்ரவரி, மார்ச் மாதமளவில் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் எதிர்க்கட்சியில் இருப்போர் அளவற்ற சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என்று கனவு காண முடியும். ஆனால், அரசை வழிநடத்திச் செல்வது கனவு காண்பதைப் போன்று இலகுவான விடயமல்ல.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.