தெலங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடல்.. 8 லட்சம் தமிழர்களின் குழந்தைகள் பாதிப்பு

குஜராத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்வழி பள்ளிகள் மூடப்பட்டது போன்று, தெலங்கானாவிலும் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். தெலங்கானாவில் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம் என்கிற சட்டத்தால் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழில் எழுதவும் படிக்கவும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் இருந்த 20க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதுடன், தமிழர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் கூட, தமிழ் பாடம் நீக்கப்பட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

வெறுமனே தமிழ் ஆசிரியர்களை நியமித்து விட்டு, பாடநூல்களை வழங்காமலும், போதிய ஒத்துழைப்பு அளிக்காமலும் பள்ளிகள் மூடப்பட்டதாக குற்றஞ்சாட்டும் தமிழர்கள், வேறு வழியின்றி இந்தி அல்லது சமஸ்கிருதம் எடுத்து படிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஊருக்கு செல்லும் போது தங்கள் பிள்ளைகள் தமிழில் பேச முடியாமலும் எழுத முடியாமலும் சிரமப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

குஜராத்தில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்ட போதே, தமிழர்கள் அதற்கு எதிராக குரலெழுப்பினர். அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு கடிதம் எழுதினார். தெலங்கானாவில் தமிழ் வகுப்புகளை மீண்டும் கொண்டு வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.