சுவிஸ் நாடாளுமன்றத்துக்கு தேர்வான முதலாவது இலங்கையராக ஒரு பெண் உறுப்பினர்

சிறி லங்காப் பின்னணியைக் கொண்ட ஒருவர் முதல் தடவையாக சுவிஸ் சமஷ்டி நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி உள்ளார்.
றூமி பாரா  (Rumy Farah)
என்ற 31 வயது நிரம்பிய செவிலியர் தொழில் புரியும் அவர் சொலத்துண் மாநிலத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் பிறந்து 6 வயதில் சுவிசுக்குப் புலம்பெயர்ந்த அவர் , தாதியர் பயிற்சிநெறியை நிறைவு செய்து பணியாற்றிக் கொண்டிருந்த காலப்பகுதியில் சுவிசின் சோசலிச ஜனநாயகக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் பிரவேசித்தவர். சோசலிச ஜனநாயகக் கட்சியின் புலம்பெயர்ந்தோர் பிரிவின் சொலத்துண் மாநில இணைத் தலைவராக விளங்கும் அவர் 2021ஆம் ஆண்டில் மாநில நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2 வருடங்கள் மாநில நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19. November 2023) நடைபெற்ற சமஷ்டி நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிட்டு 6,795 வாக்குகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். சமஷ்டி நாடாளுமன்ற நடப்பு உறுப்பினரான பிரான்சிஸ்கா றூத் சோசலிச ஜனநாயகக் கட்சியின் பட்டியலில் முதலிடம் பிடித்து தேசிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதால் காலியாகும் சமஷ்டி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தற்போது பாரா றூமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாரா றூமி சிறி லங்காப் பின்னணியைக் கொண்டவர் என்பதால் மாத்திரம் சாதனையாளராகக் கருதப்படவில்லை. தெற்காசிய நாட்டுப் பின்னணியைக் கொண்ட முதல் பெண்மணியாகவும் அவரே விளங்குகிறார்.

புலம்பெயர் பின்னணியைக் கொண்டவர்கள் சுவிஸ் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையல்ல. ஏற்கனவே ஆபிரிக்கக் கண்டத்தின் அங்கோலா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட றிக்கார்டோ லுமெங்கோ சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார்.

பேர்ண் மாநிலத்தில் உள்ள பீல் என்னும் நகரத்தில் வசித்த சட்டத்தரணியான இவர் 2006-2007 காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகக் குறுகிய காலம் பதவி வகித்தார். இவர் தவிர இத்தாலி, துருக்கி மற்றும் கிழக்கு ஐரோப்பியப் பின்னணியைக் கொண்டவர்களும் சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களாக  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சிறி லங்காப் பின்னணியைக் கொண்ட பலர் சுவிஸ் அரசியலில் உள்ளனர். அவர்களுள் பலர் கிராம சபை, நகர சபை, மாநகர சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றும் உள்ளனர். மாநிலத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலாவது சிறி லங்காப் பின்னணியைக் கொண்ட நபராக லதன் சுந்தரலிங்கம் உள்ளார். இவர் 2007ஆம் ஆண்டு லுற்சர்ன் மாநிலத்தில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். மாநிலத் தேர்தலில் இரண்டாவதாக வெற்றிபெற்ற சிறி லங்காப் பின்னணியைக் கொண்டவராக பாரா றூமியே விளங்குகிறார்.

அதேவேளை, சமஷ்டி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சிறி லங்காப் பின்னணியைக் கொண்ட முதல் நபராக தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு உள்ளார். பேர்ண் மாநிலத்தில் உள்ள தூண் நகரில் வசிக்கும் அவர் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் 2018ஆம் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் வெற்றி பெறவில்லை.

பல்லினக் கலாசாரத்தைக் கொண்ட சுவிஸ் நாட்டில் வாழும் மக்களுள் 40 விழுக்காட்டினர் புலம்பெயர்ந்த மக்களாவர். இவர்களுள் மூன்றிலொரு பங்கினர் சுவிஸ் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர். எனினும் அரசியலில் இவர்களின் பங்களிப்பும், நாடாளுமன்றில் இவர்களின் பிரதிநிதித்துவமும் வெகு சொற்பமே.

சுவிஸ் அரசியலில் ஈழத் தமிழர்களின் ஆர்வம் பல பத்தாண்டுகளுக்கு முந்தியது. தொழில்முறை மருந்துக் கலவையாளர் ஆன அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்களே சுவிஸ் அரசியலில் முதன்முதலில் கால் பதித்த இலங்கையராக, தமிழராக உள்ளார். பிரெஞ்சு மொழி பேசும் லவுசான் நகரில் வசிக்கும் இவர் 1994ஆம் ஆண்டில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் ஊடாக அரசியலில் பிரவேசம் செய்தார். அந்த ஆண்டில் லவுசான் மாநகர சபைக்கான ஆலோசனைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் தொடர்ந்து சில வருடங்கள் அந்தப் பதவியை வகித்தார். 2006ஆம் ஆண்டில் மாநகர சபைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று அந்தப் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். சமஷ்டி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியில் இவர் ஒருமுறை ஈடுபட்ட போதிலும் அந்த வாய்ப்பு இவருக்குக் கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நமசிவாயம் அவர்களைத் தொடர்ந்தே பல ஈழத் தமிழர்கள் சுவிஸ் அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர். பலர் இன்றும் பல தேர்தல்களில் வெற்றிபெற்று கிராம, நகர மற்றும் மாநகர சபைகளில் உறுப்பினர்களாகப் பதவி வகித்து வருகின்றனர்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளைப் போலவே சுவிஸ் நாடாளுமன்றத்திலும் பிரவேசித்துவிட வேண்டும் என்பது ஈழத் தமிழர்களின் நீண்டகாலக் கனவு. அதற்கான முயற்சிகள் பல தடவை மேற்கொள்ளப்பட்ட போதிலும் இன்றுவரை அது கைகூடவில்லை. ஆனால் முதல் தடவையாக சிறி லங்காவில் பிறந்த ஒரு முஸ்லிம் பெண்மணி அந்தச் சாதனையைப் படைத்துள்ளமை வரவேற்கக் கூடியதே.

சுவிஸ் அரசியலில் ஈழத் தமிழர்கள் இன்னமும் நீண்டதூரம் செல்லவேண்டி உள்ளது என்பதையும், தமது அணுகுமுறைகளை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் பாரா றூமியின் வெற்றி உணர்த்தி நிற்கிறது.


ஜனநாயக அடிப்படையிலான தேர்தல்களில் வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றமை உலகளாவிய போக்காக உள்ளதை மறுப்பதற்கில்லை. இதே போக்கே சுவிஸ் நாட்டிலும் அவதானிக்கப்படுகின்றது. அதிலும் சுவிஸ் குடியுரிமையைக் கொண்டுள்ள புலம்பெயர் பின்னணியைக் கொண்டவர்கள் தேர்தல்களில் வாக்களிப்பது ஒப்பீட்டு அடிப்படையில் மிகவும் குறைவாகவே உள்ளது. அரசியல் பின்னணியைக் காரணம் காட்டியே புலம்பெயரும் பெரும்பாலானோர் தாம் வாழும் நாட்டு அரசியலில் அக்கறையின்றி இருப்பதை எவ்வாறு புரிந்து கொள்வதெனத் தெரியவில்லை.

ஈழத் தமிழர்கள் கூட உள்நாட்டு அரசியலில் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஒரு குறையே. அது மாத்திரமன்றி தமிழர்கள் மத்தியில் நிலவும் அரசியல் அடிப்படையிலான பிளவும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில் தடையாக உள்ளது. தாம் வாழும் நாட்டில் உள்ள தேர்தல் விதிமுறைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப வாக்குகளைச் செலுத்தும் முறையையும் அவர்களுள் பலர் இன்றுவரை அறியாது உள்ளனர். இவை தவிர, வேட்பாளர்களாகத் தம்மை முன்நிறுத்துவோர் தமது பரப்புரைகளைப் பரவலாக்கம் செய்யத் தவறுவதும், சொந்தச் சமூகத்தைக் கடந்து வாக்குகளைப் பெற முடியாமல் இருப்பதுவும் ஈழத் தமிழர்களின் நாடாளுமன்றக் கனவுக்குத் தடையாக உள்ளன.

இளம் வயதினராக இருந்த போதிலும், பாரிய அரசியல் அனுவபம் அற்றவரான பாரா றூமி இஸ்லாமிய விரோதப் போக்கு ஓரளவு உள்ள ஒரு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல் தடவையிலேயே வெற்றி பெற்றிருப்பது அரசியல் ஈடுபாடு கொண்ட புலம்பெயர்ந்த சமூகத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம். அவரது அணுகுமுறையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அந்த வகையில் சுவிஸ் நாடாளுமன்றக் கனவோடு உள்ள ஈழத் தமிழர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி எனலாம்.

Leave A Reply

Your email address will not be published.