பிரமாண்ட எந்திரத்தால் கூட முடியாததை சாதித்து காட்டிய எலி வளை தொழிலாளர்கள்…!

உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளுக்கு மத்தியில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க பல்வேறு தொழில் நுட்பங்கள் கையாளப்பட்டன.

ஆஸ்திரேலிய சுரங்க நிபுணர்கள், அமெரிக்காவின் 25 டன் எடை கொண்ட ஆகர் இயந்திரம், தாய்லாந்து குகை மீட்பாளர்கள் என பல்வேறு நாடுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வரவழைக்கப்பட்டு 41 தொழிலாளர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சர்வதேச நிபுணர் அர்னால்ட் டிக்ஸ், தொழிலாளர்களை மீட்க ஒரு மாத காலம் பிடிக்கும் என பெரிய அதிர்ச்சியை அளித்தார்.

அமெரிக்க தயாரிப்பு இயந்திரமான ஆகர், மணல் குவியலின் பக்கவாட்டில் 47 மீட்டர் தொலைவுக்கு துளையிட்டு இரும்புக் குழாய்களை பொருத்தியது. மீதமிருந்த 13 மீட்டர் தொலைவுக்கு துளையிட வேண்டிய நேரத்தில் இயந்திரம் உடைந்தது. அந்த இயந்திர கழிவுகளை அகற்றுவதில் நிபுணத்துவம் பெற்ற 7 பேர் குழு மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டது. அந்த குழுவினர் அமெரிக்க இயந்திரத்தின் 14 மீட்டர் நீளம் கொண்ட பிளேடு கழிவுகளை சேகரித்து அகற்றினர்.

’எலிவளை’ தொழிலாளர்கள்: சுரங்கப் பாதை மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டெல்லியில் இருந்து 24 சிறப்புத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மெலிந்த தேகம், உயரம் குறைவான இவர்கள் சமதளம் மற்றும் மலைப்பகுதியில் எலிவளை போல குடைந்து சிறிய அளவிலான சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள். இதன் காரணமாக ‘எலி வளை’ தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

எலி வளை சுரங்கம் என்பது, மிகச் சிறிய குழிகளை தோண்டி நிலக்கரியை வெட்டி எடுப்பதாகும். இதனை அறிவியலுக்கு எதிரானது எனக் கூறி, 2014 ஆம் ஆண்டில் தடைசெய்தது தேசிய பசுமை தீர்ப்பாயம். 4 அடிக்கு மேல் அகலமில்லாத மிகச் சிறிய குழிகளைத் தோண்டி நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் முறையை கையாண்ட எலி வளை’ தொழிலாளர்கள், பக்கவாட்டில் சுரங்கங்களை உருவாக்கி, கழிவுகளை, அருகிலேயே கொட்டியவாறே துளையிட்டு முன்னேறி சென்றனர்.

ஏற்கெனவே மிகப்பெரிய இயந்திரங்களில் சுரங்கம் குடையப்பட்டு இருந்த நிலையில் மற்ற பகுதிகளை கையால் தோண்டுவது எலி துளை சுரங்க தொழிலாளர்களுக்கு எளிதான காரியமாக இருந்தது. இவ்வாறு 15 மீட்டர் அளவிற்கு துளையிட்டு, அதில் குழாய்களைப் பொருத்தினர். இந்த குழாய்கள் வழியாக 41 பேரையும் மீட்டுள்ளனர் எலி வளை சுரங்க சிறப்பு தொழிலாளர்கள். நவீன இயந்திரங்களும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும் தோல்வியை சந்தித்த நிலையில், நாட்டின் ஹீரோக்களாக மிளிர்கின்றனர் எலி வளை சுரங்க சிறப்புத் தொழிலாளர்கள்.

Leave A Reply

Your email address will not be published.