உக்ரைன் போரில் ஶ்ரீலங்கா கப்டன் ரனிஷ் உட்பட 3 இராணுவத்தினர் மரணம்

கடந்த டிசம்பர் 04ம் திகதி உக்ரைன் போர்முனையில் படையினருக்கு தலைமை தாங்கிய உக்ரேனிய ஆயுதப்படையின் முதலாவது சிறப்புப் படையின் தளபதியாக கடமையாற்றிய கப்டன் ரனிஷ் ஹேவகே உட்பட இலங்கை இராணுவத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மூவர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய அரசாங்கப் படைகளால் “கறுப்பு எதிரி” என்று அழைக்கப்பட்ட கேப்டன் ரனிஷ் ஹேவகே ரஷ்யர்களால் ஒரு இலக்காகவும் குறிவைக்கப்பட்டிருந்தார்

அவர் இலங்கை காலாட்படை மற்றும் கொமாண்டோ படையில் பயிற்சி பெற்ற பின்னர் அதிலிருந்து விலகி , உக்ரேனிய இராணுவத்தின் வழக்கமான உறுப்பினராக மார்ச் 2022 இல் சேவையில் சேர்ந்துள்ளார்.

ரஷ்ய-உக்ரைன் போரின் போது அவர் முன்னோடியாக இருந்த துணிச்சலின் காரணமாக, உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி அவருக்கு ஐந்து சிறப்பு விருதுகளை வழங்கியுள்ளார்.

போர் முனையில் ஒன்பது முறை காயமடைந்து உக்ரைன் அரசின் பாதுகாப்பிற்காகப் போராடிய ரனிஷ் ஹேவகே , அந்நாட்டு ராணுவத்தில் “கெப்டன் டென்டிஷ்” என அழைக்கப்படுகிறார்.

உக்ரேனிய முன்னரங்கின் பாதுகாப்பு எல்லைக்கு அப்பால் நடவடிக்கையில் இணைந்து கொண்ட ரனிஷ் ஹேவகேவின் கீழ் பணிபுரிந்த பிரியந்த என்ற இலங்கை இராணுவ வீரர் கடந்த 04 ஆம் திகதி காலை போர்க் களத்தில் உயிரிழந்துள்ளார்.

போர் முனையில் இடம் பெற்ற ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால், இறந்த ராணுவ வீரரின் உடலை எடுத்துச் செல்ல உக்ரைன் படையினர் முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அப்போது கப்டன் ரனிஷ் ஹேவகே இலங்கை ராணுவ வீரரின் உடலை எடுத்துச் செல்ல முன்வந்ததோடு, அவருக்கு ஆதரவாக மேலும் மூன்று இலங்கை ராணுவ வீரர்கள் அவருக்கு துணையாக இணைந்துள்ளனர்.

“இறந்த இலங்கை இராணுவ வீரரின் உடலை எடுத்து வர ரனிஷ் சேர் உடன் நால்வர் குழுவாகச் சென்றோம். வழியில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதால் அவரை விட்டு , மூவரும் முன்னே சென்றோம். முன்வரிசைக்குப் போகும் போது பீரங்கிகளால் சுட ஆரம்பித்தார்கள். அத்தோடு ட்ரோன் தாக்குதலும் வந்தது

4ம் தேதி காலை 9 மணியளவில் இடம் பெற்ற பீரங்கி தாக்குதல் தொடர்ந்ததால்  ஹேவகே சேருடன் நானும் காயம் அடைந்தேன்.எங்களுடன் சென்ற சிங்கப் படையணியின் ஒருவர் கொல்லப்பட்டார். ஹேவகே சேர் காயம் அடைந்தார். அவரை பதினைந்து கிலோமீட்டர் தூரம் தூக்கிக் கொண்டு வந்தேன்.எனது கை பீரங்கியிலிருந்து வந்த துண்டுகளால் காயமாகியிருந்தது.ரணிஷ் ஹேவகே சேர் போன்ற ஒரு வீரன் எதிரி மண்ணில் சாக அனுமதிக்க முடியாது, அதனால் எப்படியும் அவரை தூக்கிக் கொண்டு வந்தேன்.வழியில் மீண்டும் ரஷ்ய ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்க ஆரம்பித்தனர்.இதற்கிடையில் ரனிஷ் சார் மரணித்தார்.

போரில் ஒருவர் இறந்தால் , அவரது உடலை எடுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று எப்பொழுதும் ஹேவகே சேர் சொல்வார். ஆனால் நான் என்னால் முடிந்த அளவு முயற்சித்தேன் . ட்ரோன்கள் என்னைத் தொடர்ந்து தாக்கியதால், நான் தனியாகப் பின்வாங்க வேண்டியதாயிற்று….” என போர் நடவடிக்கையில் ஈடுபட்டு உக்ரேனிய இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹதுருசிங்க , இராணுவ கமாண்டோ படையை விட்டு வெளியேறி உக்ரைன் இராணுவத்தில் தான் இணைந்ததாகவும் தெரிவித்தார்.

கமாண்டோ பயிற்சி மூலம் பெற்ற அனுபவத்தை பயன்படுத்தி எப்படியாவது தனது கட்டளை அதிகாரியின் உடலை கொண்டு வர மீண்டும் செல்லப் போவதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டில் வழக்கமான சேவையை விட்டு வெளியேறிய சுமார் 70 பேர் உக்ரைன் அரசாங்க இராணுவத்தின் சேவைக்கு விண்ணப்பித்துள்ளனர், மேலும் கப்டன் ரனிஷுடன் கிட்டத்தட்ட 20 இலங்கைப் படையினர் அங்கு சென்று சேவையாற்றியுள்ளனர். கனேடிய துருப்புக்களின் குழுக்களும் அவருக்கு கீழ் பணியாற்றியுள்ளனர்.

அவருடன் இருந்த 21 கனேடிய வீரர்கள் ஒரே போரில் இறந்தனர். அந்த சண்டையிலும் கேப்டன் ரனிஷ் ஹேவகே காயம் அடைந்து உயிர் தப்பினார்.

ரனிஷ் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அவரது தாயார், சகோதரி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களும் உக்ரைனுக்கு வந்திருந்ததாக அந்த நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கப்டன் ரனிஷ் ஹேவகேவின் கட்டளைக் குழுவில் இணைந்து கொள்வதற்காக அஜர்பைஜான், துபாய் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்ற சுமார் 70 இலங்கை அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகள் போலந்து ஊடாக உக்ரேனுக்கு செல்லவிருந்துள்ளனர்.

உக்ரைன் அரசாங்கத்திடம் இருந்து இலங்கை இராணுவத்தில் உள்ள படையினர் மாதம் ஒன்றுக்கு 10 – 12 இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதாக தெரியவந்துள்ளது.

போர்க்களத்தில் உயிரிழந்த மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் உக்ரைனில் இருந்து நேற்று (05) தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.