150 சவரன், பிஎம்டபிள்யூ கார்.. கேரள மருத்துவரின் தற்கொலைக் கடிதம்

திருவனந்தபுரம்: மருத்துவர் ஷஹானா தற்கொலை வழக்கில் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ரூவைஸ் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

அறுவைசிகிச்சைத் துறையில் மருத்துவராகப் பணியாற்றி வந்த ஷஹானா (26) நேற்று தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில், அவரது முன்னாள் மணமகன் காவல்துறை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

திங்கள்கிழமை இரவு, ஷஹானாவின் குடியிருப்பில் இருந்து உயிரற்ற உடல் மீட்கப்பட்டது. அவருக்கும் ரூவைஸுக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், வரதட்சிணை காரணமாக திருமணத்தில் சிக்கல் விழுந்தது. அது கடைசியில் திருமணத்தை நிறுத்தும் அளவுக்குச் சென்றதால் ஷஹானா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை இரவு, அவர் பணிக்கு வர வேண்டிய நிலையில், வராதால், உடன் பணியாற்றுவோர் அவரை செல்போனில் அழைத்தபோது, அவர் போனை எடுக்கவில்லை. உடனடியாக அவரது நண்பர்கள் அவரது குடியிருப்புக்குச் சென்று பார்த்தபோது, அது உள்பக்கமாக பூட்டியிருந்த நிலையில், அவர் கதவையும் திறக்காததால் சந்தேகம் ஏற்பட்டது.

கதவை உடைத்து உள்ளே சென்ற நண்பர்கள், உயிரற்ற உடலைத்தான் மீட்டனர்.

அவர் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தில், அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார். அனைவரின் கவனமும் பணத்தின் மீதே இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். ஏன் ரூவைஸ் குடும்பத்தினர் இவ்வளவு அதிகமான வரதட்சிணையைக் கேட்டார்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஷஹானா, ஒருவேளை அது அனைத்தும் அவரது சகோதரிக்குக் கொடுப்பதற்காக இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது என்று எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில், ரூவைஸ் மீது கடுமையான நடவடிக்கை பாய்ந்திருக்கிறது, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், ஷஹானா தற்கொலையை வரதட்சிணை தொடர்பான வழக்காக மாற்றி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருப்பதோடு, ரூவைஸ் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

150 சவரன் தங்க நகைகள், 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவை ரூவைஸ் குடும்பத்தினர் கேட்டிருந்ததாகவும், மேலும் வரதட்சிணையை அதிகரித்தபோதுதான் திருமணம் நின்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.