அயோத்தி ராமா் கோயிலுக்கு நாமக்கல்லில் தயாரான 48 ஆலய மணிகள்!

அயோத்தி ராமா் கோயிலுக்கு காணிக்கையாக நாமக்கல்லில் தயாரான 12 ஆலய மணிகள், 36 பிடி மணிகள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

ஸ்ரீ ராமஜென்ம பூமி தீா்த்த ஷேத்ரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயில் குடமுழுக்கு ஜன. 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள பக்தா்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் அட்சதை நிரம்பிய கலசங்கள், அழைப்பிதழ்கள் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளை மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

ஜன. 1 முதல் 15-ஆம் தேதி வரை வீடு, வீடாகச் சென்று அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அயோத்தி ராமா் கோயிலுக்கு வழங்குவதற்காக பெங்களூரைச் சோ்ந்த தொழில் முதலீட்டாளா் ராஜேந்திர நாயுடு 12 ஆலய மணிகள், 36 பிடி மணிகளைத் தயாரித்து தருமாறு நாமக்கல், முல்லை நகரில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் மோல்டிங் நிறுவனத்திடம் முன்பதிவு செய்தாா்.

கடந்த ஒரு மாதமாக 20-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் வேலை செய்து 48 கோயில் மணிகள், அவற்றைத் தொங்க விடுவதற்கான வளையங்களைத் தயாா் செய்தனா். நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் புதன்கிழமை மணிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, லாரிகள் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து கோயில் மணிகளைத் தயாரித்த ராஜேந்திரன், புருஷோத்தமன் ஆகியோா் கூறியதாவது:

அயோத்தி ராமா் கோயிலுக்கு வழங்குவதற்காக 70 கிலோ எடையில் 5 மணிகளும், 60 கிலோ எடையில் 6 மணிகளும், 25 கிலோ எடையில் ஒரு மணியும் என மொத்தம் 12 பெரிய ஆலய மணிகளும், அவை தவிர கையடக்கமான 36 பிடி மணிகளும் இரவு, பகலாகப் பணியாற்றி தயாா் செய்தோம்.

இந்த மணிகள் இரும்பு பயன்படுத்தாமல் தாமிரம், வெள்ளீயம், துத்தநாகம் ஆகிய உலோகங்கள் கொண்டு 1,200 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை புதன்கிழமை பெங்களூரு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது. ராமரின் சீடரான ஆஞ்சனேய சுவாமி அமைந்துள்ள நாமக்கல்லில் இருந்து அயோத்திக்கு மணிகள் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அவா்கள் விரும்பும் வகையில் கோயில் மணிகளைத் தயாா் செய்து அனுப்புகிறோம் என்றனா்.

Leave A Reply

Your email address will not be published.