நாடாளுமன்றத்தில் அத்துமீறல்: 8 பேர் பணியிடை நீக்கம்

மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இருவர் அத்துமீறி புகைக் குப்பிகளை வீசிய சம்பவத்தில் 8 பாதுகாப்பு அதிகாரிகளை மக்களவை செயலகம் இடைநீக்கம் செய்துள்ளது.

மக்களவையில் புதன்கிழமை பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞா்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவா் தாக்குதல் நடத்தினா்.

இவா்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினா் கைது செய்து தில்லி போலீஸிடம் ஒப்படைந்தனா். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றம் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் 22-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் நடந்த இந்தத் தாக்குதல் திட்டத்தை 6 நண்பா்கள் இணைந்து செயல்படுத்தியது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல கட்ட சோதனைகளை கடந்து மக்களவைக்குள் புகைக் குப்பிகளை இருவர் கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மக்களவைச் செயலகம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமாக இருந்த 8 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.