18 மாதங்கள் திட்டம்… நாடாளுமன்ற அத்துமீறலில் வெளியான பரபரப்பு தகவல்கள்

நாடாளுமன்ற மக்களவையில் வண்ணப் புகை குண்டுகளை வீசிய விவகாரத்தில், சுமார் 18 மாதங்கள் திட்டமிட்டு அத்துமீறலை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது. வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள், செப்டம்பர் மாதத்திலேயே ஒன்றிணைந்துள்ளனர்.

மக்களவையில் புதன்கிழமை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்த இரண்டு இளைஞர்கள், வண்ணப் புகை குண்டுகளை வீசி அத்துமீறிய சம்பவத்தால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல், நாடாளுமன்றத்துக்கு வெளியே 2 பேரும், இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரும் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் தொடர்புடைய 6 பேரும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள்.

அவையில் தாவிக் குதித்து ஓடிய சாகர் ஷர்மா உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.அதேபோல மனோரஞ்சன் கர்நாடகாவையும், நீலம் ஹரியானாவையும் சேர்ந்தவர். இவர்களில் அமோல் ஷிண்டே மகாராஷ்டிராவையும், வெளியே போராட்டக் காட்சிகளை வீடியோ எடுத்த லலித் ஜா பீகாரையும் சேர்ந்தவர்கள்… இவர்கள் அனைவரும் டெல்லியில் தங்க வீடு கொடுத்த விஷால் சர்மா என்பவர் ஹரியானாவைச் சேர்ந்தவர்.

இவர்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இந்த 6 பேருக்கும் இருக்கும் ஒரே தொடர்பு, பகத் சிங் பேன்ஸ் க்ளப் என்ற பேஸ்புக் பக்கம்தான். அந்த பக்கத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டம், சர்வாதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அடிக்கடி விவாதித்துள்ளதாக கூறுகிறது காவல்துறை.

சுமார் 18 மாதங்களுக்கு முன்பு முதன்முதலில் மைசூருவில் நேரில் சந்தித்த 6 பேரும், நாடாளுமன்றத்தில் அத்துமீறுவது தொடர்பாக பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகு பலமுறை, வெவ்வேறு இடங்களில் சந்திப்புகளை நடத்திய இந்த கும்பல், மிகவும் கவனமாக திட்டமிட்டு, இந்த சம்பவத்தை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, சண்டிகர் விமான நிலையம் அருகே கூடி விரிவான ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள் இந்த குழுவினர். அதன்பிறகு, மீண்டும் சந்தித்துக் கொண்டபோது வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருப்பதாகவும், அது குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்றும் ஆலோசித்து இருக்கிறது இந்த 6 பேர் குழு.

அதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதத்தில் லக்னோவில் இருந்து டெல்லிக்கு வந்து, நாடாளுமன்ற வளாகத்தை உளவு பார்த்திருக்கிறார் சாகர் சர்மா. இதனிடையே, நாடாளுமன்றத்திற்குள் செல்வதற்கான பரிந்துரை கடிதம் பெறுவதற்காக, பாஜக எம்.பி., பிரதாப் சிம்ஹாவை அடிக்கடி போய் சந்தித்து வந்துள்ளார் மனோரஞ்சன். கடந்த செப்டம்பர் மாதத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் கூட்டம் நடந்த நிலையில், அப்போதே இந்த சம்பவத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறது இந்த 6 பேர் குழு. ஆனால், அப்போது அவர்களுக்கு பாஸ் பெற முடியாததால், நாடாளுமன்றத்திற்குள் செல்ல முடியவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ் கிடைத்ததும், டெல்லிக்கு வந்த 6 பேரும் குருகிராமில் உள்ள விஷால் சர்மாவில் வீட்டில் தங்கி திட்டமிட்டதாக தெரிகிறது.அவர்களின் திட்டத்தின்படி, டெல்லி கல்யாண் பகுதியில் 5 வண்ணப் புகை குண்டுகளை ரூ.1,200 ரூபாய்க்கு வாங்கியுள்ளார் அமோல் ஷிண்டே.

6 பேரும் நடாளுமன்றத்திற்குள் புகுந்து அத்துமீறலில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாலும், இருவருக்கு மட்டுமே பாஸ் கிடைத்துள்ளது. அதனால், திட்டத்தை மாற்றி, சாகர் சர்மாவும், மனோ ரஞ்சன் ஆகியோர் மட்டுமே மக்களவைக்குள் நுழைந்து அத்துமீறியுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் வண்ணப் புகை குண்டுகளை வீசிய காட்சிகளை படம்பிடித்த லலித் ஜாவின் கையில்தான், மற்ற 4 பேரின் செல்போன்களும் இருந்துள்ளன. அவரிடம் இருக்கும் செல்போன்களை கைப்பற்றினால் மட்டுமே, பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என காவல்துறை கூறினாலும், தாக்குதல் சம்பவத்தில் எந்த அமைப்புக்காவது தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.