இலங்கையில் 7 நாள்களுக்குள் 13,666 பேர் கைது! – 1,097 பேருக்குப் புனர்வாழ்வு.

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘யுக்திய ஒப்பரேஷன்’ நடவடிக்கையின் கீழ் 7 நாள்களுக்குள் 13 ஆயிரத்து 666 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 717 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 174 பேர் தொடர்பில் சொத்து சம்பந்தமான விசாரணகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆயிரத்து 97 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 17 முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையான 7 நாள்களுக்குள் 9 கிலோ 82 கிராம் ஹெரோயினும், 4 கிலோ 679 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 273 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன. 9 இலட்சத்துக்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளும் மீட்கப்பட்டுள்ளன.

பண்டிகைக் காலத்தைக் கருத்தில்கொண்டு யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவ தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காரணத்தால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெறும் தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்குத் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நாளைமறுதினம் 27 ஆம் திகதி முதல் யுக்திய ஒப்பரேஷன் முழு அளவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.