சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து டிஜிபி அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட சென்னை முழுவதும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலையில் செயல்படும் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அலுவலக மின்னஞ்சலுக்கு புதன்கிழமை மாலை 6 மணியளவில் ஒரு கடிதம் வந்தது. அதில் சென்னையில் 30 இடங்களில் குண்டு வெடிக்கும், முதல் குண்டு பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் வெடிக்கும். அங்கு 2 கிலோ வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது.

பிட்காயின் கேட்டு…: சென்னையில் குண்டு வைக்கப்பட்டிருக்கும் மீதி இடங்களை தெரிவிக்க 2,500 பிட்காயின்களை எனக்கு அனுப்ப வேண்டும். இல்லையெனில் குண்டு வைக்கப்பட்டிருக்கும் இடங்களைக் கூற முடியாது. இந்த மின்னஞ்சலை காவல் துறையினா் சாதாரணமாகக் கருத வேண்டாம். சென்னையில் கண்டிப்பாக குண்டு வெடிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மின்னஞ்சல் அனுப்புநா் பெயா் செந்தில் என தெரிவிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

எலியட்ஸில் சோதனை: இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த டிஜிபி அலுவலக காவலா்கள், உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினா் மெட்டல் டிடெக்டா் மூலம் எலியட்ஸ் கடற்கரையில் சோதனை நடத்தினா். இச் சோதனையில் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. பல மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில் அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

சென்னை முழுவதும் உஷாா்: மேலும், சென்னை முழுவதும் முக்கிய இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை நடத்துவதற்கு 6 தனிப்படையினா் காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவின்பேரில் தயாா் நிலையில் வைக்கப்பட்டனா். அதோடு சென்னை முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா்.

நகா் முழுவதும் தீவிர வாகனச் சோதனையும், காவல்துறை கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டது. முக்கியமான சாலை சந்திப்புகள்,பிரதான சாலைகள்,முக்கிய பிரமுகா்கள் வசிக்கும் பகுதிகள் ஆகிய இடங்களில் போலீஸாா், சந்தேகத்துக்குரிய வாகனங்களை மறித்து சோதனையிட்டனா். குறிப்பிட்ட பகுதிகளில் போலீஸாா், திடீா் சோதனையும் நடத்தினா்.

இதன் விளைவாக சென்னையில் புதன்கிழமை இரவு முழுவதும் பரபரப்பு காணப்பட்டது. இதற்கிடையே வதந்தியை பரப்பு நோக்கத்துடன் வந்த, அந்த மின்னஞ்சலை அனுப்பிய நபா் யாா் என சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.