ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் : ரஷ்யா , தென்கொரியா சுனாமி எச்சரிகை.

தோக்கியோ: புத்தாண்டு நாளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மத்திய ஜப்பானையும் அதன் மேற்குக் கரையோரங்களையும் உலுக்கியது.

அதன் காரணமாக ஏராளமான குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

பாதிக்கப்பட்ட வட்டாரத்தில் விமான, ரயில் சேவைகளில் இடையூறு ஏற்பட்டது.

தொடக்கத்தில் 7.6 ரிக்டர் என அளவிடப்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக ஜப்பானின் கிழக்குக் கடலோரத்தில் ஏறக்குறைய 1 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பின.

இதற்கு மேலும் பெரிய அலைகள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க ஒலிபரப்பு நிறுவனமான என்எச்கே கூறியது.

கடலோர வட்டாரங்களான இஷிகாவா, நிகாட்டா, டொயாமா ஆகியவற்றுக்கு ஜப்பானிய வானிலை ஆய்வகம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

இதனிடையே, இஷிகாவா மாநிலம், வாஜிமா நகரில் வீடுகள் இடிந்து விழுந்து, குடியிருப்பாளர்கள் உயிருடன் புதைந்த ஆறு சம்பவங்கள் இடம்பெற்றதை அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

வாஜிமாவில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தலைமைச் செயலாளர் யோஷிமாசா ஹயாஷி செய்தியாளர்களிடம் சொன்னார்.

ஜப்பானில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஏற்பட்ட சேதத்தை அதிகாரிகள் கணக்கிட்டு வருவதாக பிரதமர் ஃபுமியோ கிஷிடா என்எச்கே ஒளிபரப்பில் கூறினார்.

இனியும் நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம் இருப்பதால் பொதுமக்கள் அதற்குத் தயாராக இருக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

“அடுத்தடுத்து நிகழக்கூடிய நிலநடுக்கங்களை எதிர்கொள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சுனாமி ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக தங்களது இருப்பிடத்தைவிட்டு வெளியேற வேண்டும்,” என்று திரு கிஷிடா கூறினார்.

தலைநகர் தோக்கியோவிலும் சில கட்டடங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கின.

இஷிகாவா, டொயாமா வட்டாரங்களில் மட்டும் 36,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரமின்றி இருளில் தவித்ததாக ஹொக்குரிகு மின்சார நிலையம் கூறியது.

இஷிகாவாவுக்குச் செல்லும் அதிவேக ரயில்களின் சேவை துண்டிக்கப்பட்டது. அந்த வட்டாரத்திலும் நிகாட்டாவிலும் தொலைபேசி மற்றும் இணையச் சேவைகளில் இடையூறு ஏற்பட்டதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்தன.

இஷிகாவாவுக்கும் டொயாமாவுக்கும் சென்ற ஏஎன்ஏ நிறுவனத்தின் நான்கு விமானங்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும் நடுவழியில் திரும்பி வந்தன.

மற்றொரு விமான நிறுவனமான ஜப்பான் ஏர்லைன்ஸ், இஷிகாவா மற்றும் நிகாட்டா வட்டாரங்களுக்கான சேவைகளை ரத்து செய்துவிட்டதாக ஆசாஹி தொலைக்காட்சி கூறியது.

நிலநடுக்கம் ஆகப்பெரியதாக அறிவிக்கப்பட்டதும் ஒளிபரப்பு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அவசர அழைப்பு விடுக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மாறின.

“உங்கள் வீடும் எல்லா உடைமைகளும் உங்களுக்குத் தேவையானவை. ஆயினும், இவை எல்லாவற்றையும்விட உயிர் முக்கியம். எனவே, உயரமான இடங்களை நோக்கி ஓடுங்கள்,” என்று என்எச்கே ஒலிபரப்பாளர் ஒருவர் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்தார்.

ரஷ்யாவும் தனது கிழக்கு வட்டார நகரங்களான விளாடிவோஸ்டோக் மற்றம் நகோட்காவுக்கு சுனாமி எச்சரிகை விடுத்தது.

அதுபோல், தென்கொரியாவின் கிழக்கு மாநிலமான கேங்வோனிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.