உலகம் சுற்றும் ரணிலுக்கு மேலும் ரூ. 20 கோடி எதற்கு? – அநுர கேள்வி.

“அரிசிக்கு, பாலுக்குக் கூட வற் விதிக்கப்படும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மேலதிகமாக 20 கோடி ரூபா கோரப்பட்டுள்ளது. இது என்ன விதத்தில் நியாயம்?”

– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நாடாளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்கள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக மேலதிகமாக 20 கோடி ரூபா கோரப்பட்டுள்ளது.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வெளிநாட்டு பயணங்களும் நிதி உள்ளடக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் எதற்காக மேலதிக நிதி?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்துக்கு 4 தடவைகள் சென்றுள்ளார், ஜப்பானுக்கு இரு தடவைகள் சென்றுள்ளார், 14 மாதங்களில் 14 வெளிநாட்டுப் பயணங்கள், மரண வீடு, திருமண வீடுகளுக்கும் செல்கின்றார். அரச தலைவர்கள் வராத மாநாடுகளுக்குச் சென்று உரையாற்றுகின்றார்.

நிலைமை இவ்வாறு இருக்கையில் எப்படி நிதி ஒழுக்கம் பற்றி கதைக்க முடியும்?

பாடசாலை மாணவர்களுக்கான உணவுக்கு நிதி வழங்கப்படவில்லை, வினாப் பத்திரம் திருத்தும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இல்லை, நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. அரசி, பால், எரிபொருள், பாடசாலை உபகரணங்கள், வைத்திய உபகரணங்களுக்குகூட வற் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நிலைமை இவ்வாறு இருக்கையில் எதற்காக ஜனாதிபதியின் உல்லாச பயணங்களுக்கு இவ்வளவு செலவிட வேண்டும்?” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.