கயிறு கழுத்தில் இறுகி 12 வயது சிறுவன் பரிதாபச் சாவு.

வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடிக் கொண்டிருந்த 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர், கயிறு கழுத்தில் இறுகியதில் பலியாகியுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியிலேயே இன்று (11) பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா, மாகாஸ்தோட்ட பகுதியில் தனிவீட்டில் தாய், இரு மகள்மார் மற்றும் மகன் என நால்வர் வசித்து வருகின்றனர்.

தந்தை இறந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், தாய் பிள்ளைகளைப் படிக்க வைத்து வாழ்ந்து வரும் நிலையில், மூத்த மகள் பல்கலைக்கழகப் படிப்புக்குச் சென்ற பின் வீட்டில் சிறிய மகள் தாய் மற்றும் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் என மூவர் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் வழமைபோல் சிறுவன் சவுக்கு மரம் ஒன்றில் கயிறு கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

தாய் தலைவலியால் வீட்டில் படுத்து இருந்த நிலையில் பிற்பகல் ஒரு மணியளவில் மரத்தில் விளையாடிய சிறுவன் கழுத்தில் கயிறு இறுகித் துடித்துள்ளார். சம்பவத்தை அவதானித்த அருகிலிருந்த வீட்டார் அந்தச் சிறுவனைக் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டுள்ளனர்.

இதையடுத்து மரத்துக்கு அருகில் ஓடியவர்கள் சிறுவனை மீட்ட போதிலும் சிறுவன் மயக்கத்தில் இருக்கின்றார் என்று உணர்ந்து 1990 அவசர அம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பின் அவசர அம்புலன்ஸ் வாகனத்தில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மருத்துவர்கள் சிறுவனைப் பரிசோதித்தபோது சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்த நுவரெலியா பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் நுவரெலியா மாவட்ட நீதிவானின் மரண விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.