திருகோணமலை பஸ் நிலையத்தில் சிறுமியை கடத்த முயற்சித்த மர்ம நபர் கைது

திருகோணமலை பிரதான பஸ் நிலையத்தில் சிறுமி ஒருவர் தனது உறவினர்களுடன் பஸ் நிலையத்திற்கு வருகை தந்தபோது தனக்கு தாகமாக இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளனை அடுத்து சிறுமியின் உறவினர்கள் அருகிலுள்ள கடைக்கு தண்ணீர் போத்தல் வாங்குவதற்காக சிறுமியை அவ்விடத்தில் விட்டு விட்டு சென்றுள்ளனர்.

தண்ணீர் போத்தல் வாங்கி வந்தவுடன் சிறுமி அவ்விடத்தில் இல்லாததால் அவர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது குறித்த சிறுமியுடன் கதைத்துக் கொண்டிருந்த நபர் சிறுமியை அங்கிருந்து இழுத்துச் சென்ற காட்சி அங்கிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொலிஸார் குறித்த நபரை தேடி வந்த நிலையில் திருமலை சங்கமித்த கடற்கரை பகுதியில் சிறுமியொருவர் அழுதுக் கொண்டிருந்ததாக பொது மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து திருமலை பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், திருமலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed.