மக்களுக்கு நன்மைகளை வழங்குங்கள்! – பிரதேச செயலாளர்களிம் ஜனாதிபதி கோரிக்கை.

“அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கும் நிதியை உரிய முறையில் செலவழித்து, அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி, மக்களுக்கு நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துப் பிரதேச செயலாளர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும், பிரதேச செயலாளர்களுடனும் நேற்று (15) கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை – 2024’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில் –

”நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னர், இந்த ஆண்டு 2024 இல் மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்ட எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டது. அதன் பின்னர் கொவிட் தொற்றினால், 2022 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமாகக் குறைந்தது. எனினும், பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதாரத்தை சீர்செய்ய முடிந்தது. 2024ஆம் ஆண்டில் 2 வீதம் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு 2 வீதம் வளர்ச்சியை எட்டினாலும், 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலையை அடைவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். இருப்பினும், 2027 அல்லது அதற்கு முன்னதாக அந்த இலக்கை அடைய வேண்டும் என்று நான் இலக்கு வைத்துள்ளேன்.

2022 ஆம் ஆண்டு நான் நாட்டைப் பொறுப்பேற்ற போது நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்திருந்தது. இதன்போது சிறுபோகத்தை வெற்றிகரமாக செய்வதற்கு முன்னுரிமை கொடுத்தேன். அதன் பின்னர் பெரும்போகத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. அப்போது எங்களிடம் பணம் இருக்கவில்லை. உலக உணவு அமைப்பின் மூலம் 36,000 மெட்ரிக் தொன் உரத்தை அமெரிக்கா எங்களுக்கு வழங்கியது. இந்தியாவில் இருந்து 40,000 மெட்ரிக் தொன் யூரியா வழங்கப்பட்டது. உலக வங்கியிடமிருந்து 135,000 மெட்ரிக் தொன் உரம் கிடைத்தது. இதனாலேயே சிறுபோகத்திலும், பெரும்போகத்திலும் சிறந்த முறையில் விவசாயம் செய்ய முடிந்தது.

தற்போது நிலைமை சீராகி வருகிறது. அடுத்த 10-15 ஆண்டுகளில் நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே எங்கள் நோக்கம். எவ்வாறாயினும், தற்போது நிவாரணம் தேவைப்படும் மக்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, நாங்கள் வழங்கும் பணத்தின் அளவை அதிகரித்துள்ளோம். பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த திட்டத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். அந்தக் குறைகளை இந்த வருடம் சரி செய்து கொண்டு நாம் முன்னேற வேண்டும்.

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நாங்கள் வழங்கும் பணம் அனைத்தும், நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் சேர்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் அந்த பணத்தை அன்றாட தேவைகளுக்காக செலவிடுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு இந்த பணம் நாட்டின் பொருளாதாரத்தில் சேர்க்கப்படும். மேலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். இதனால் தனியார் துறையிலும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகிறது. பெருந்தோட்டத் துறையினருக்கும் சம்பள அதிகரிப்ப வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பின் பலனை பொருளாதாரம் பெறுகிறது.
ஓவியக் கண்காட்சிகளைப் பார்வையிட்டார் ரணில்!
கடந்த காலத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகத்தர்கள் நட்டத்தை எதிர்கொண்டனர். எனினும், அவர்களுக்கும் தற்போது நிலுவைப் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணம் மீண்டும் பொருளாதாரத்தில் சேரும்.

மேலும், மக்களுக்கு இலவச நில உரிமை வழங்கும் ‘உருமய’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதன் மூலம் மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதன்படி முதற்கட்டமாக 10 லட்சம் பேருக்கு காணி உரிமை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பிரச்சினைகள் உள்ள இடங்களில், பிரச்சினைகளைத் தீர்த்து, பணிகளைச் செயல்படுத்த வேண்டும். மேலும், மக்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் உரிமையை அவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து! வழிபாட்டு உரிமையைத் தடுக்காதே!!” “பொய் வழக்குப் போடாதே! கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்!!” நெடுங்கேணி பொலிஸ் நிலையம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை
தற்போதுள்ள பொருளாதாரத்தையே நாம் தொடர முடியாது. நாட்டை வங்குறோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகின்றது. நிலுவையில் உள்ள கடன்களுக்கு கால அவகாசம் கோரியுள்ளோம். இங்கு நமது ஏற்றுமதியை விட இறக்குமதிகள் அதிகமாக இருக்கின்றன. இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையே உள்ள இடைவெளியை ஈடுசெய்ய ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்க வேண்டும். இதனைத் தவிர்க்க வேண்டுமாயின் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

கடந்த பொருளாதார நெருக்கடியின் போது நாம் அனைவரும் பாதிக்கப்பட்டோம். அந்த நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாம் எடுத்துள்ள இந்த முயற்சிகளினால் எந்தப் பயனும் கிடைக்காமல் போய்விடும். எனவே நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.