ஐ.பி.எல்., லீக் போட்டியில் சரிந்த குஜராத் அணி 33 ரன் வித்தியாசத்தில் தோல்வி.

லக்னோவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பேட்டிங்கில் சரிந்த குஜராத் அணி 33 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ‘வேகத்தில்’ அசத்திய யாஷ் தாகூர் 5 விக்கெட் கைப்பற்றினார்.

இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. லக்னோவில் நடந்த லீக் போட்டியில் லக்னோ, குஜராத் அணிகள் மோதின. லக்னோ அணிக்கு உமேஷ் யாதவ் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ குயின்டன் டி காக் (6), தேவ்தத் படிக்கல் (7) வெளியேறினர். பின் இணைந்த கேப்டன் ராகுல், ஸ்டாய்னிஸ் ஜோடி நிதானமாக விளையாடியது. ஸ்பென்சர் ஜான்சன் வீசிய 4வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார் ராகுல். ஜான்சன், உமேஷ் பந்தில் தலா ஒரு பவுண்டரி விரட்டினார் ஸ்டாய்னிஸ். மூன்றாவது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்த போது தர்ஷன் ‘வேகத்தில்’ ராகுல் (33) வெளியேறினார். தர்ஷன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்டாய்னிஸ் (58) அரைசதம் கடந்தார். மோகித் வீசிய 18வது ஓவரில் பூரன் ஒரு சிக்சர், ஆயுஷ் படோனி 2 பவுண்டரி விளாச 17 ரன் கிடைத்தன. ரஷித் கான் ‘சுழலில்’ படோனி (20) சிக்கினார்.

லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது. பூரன் (32), குர்னால் பாண்ட்யா (2) அவுட்டாகாமல் இருந்தனர். விக்கெட் சரிவு எட்டக்கூடிய இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் (19) சுமாரான துவக்கம் கொடுத்தார். வில்லியம்சன் (1) ஏமாற்றினார். சாய் சுதர்சன் (31) ஆறுதல் தந்தார். குர்னால் பாண்ட்யா ‘சுழலில்’ ஷரத் (2), தர்ஷன் (12) சிக்கினர். யாஷ் தாகூர் ‘வேகத்தில்’ விஜய் சங்கர் (17), ரஷித் கான் (0) வெளியேறினர். நவீன் பந்தில் உமேஷ் (2) அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய யாஷ் தாகூர் பந்தில் ராகுல் டிவாட்டியா (30), நுார் அகமது (4) அவுட்டாகினர்.

குஜராத் அணி 18.5 ஓவரில் 130 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. லக்னோ சார்பில் யாஷ் தாகூர் 5, குர்னால் பாண்ட்யா 3 விக்கெட் சாய்த்தனர்.

Leave A Reply

Your email address will not be published.