யாழ்ப்பாணத்தில் புற்றுநோயால் கடந்த வருடம் மட்டும் 71 பேர் சாவு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடம் 2023ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் சரியான உணவுப் பழக்கம் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருபவர்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், சூலகப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், சுவாசம், தொண்டைப் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய், உடல் உள் உறுப்புக்களில் ஏற்படும் புற்றுநோய் எனப் பல வகையான புற்றுநோய்கள் இனம் காணப்படுகின்றன.

புற்றுநோயைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை ஒழுங்காக மேற்கொள்ளும்போது நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் டிசம்பர் வரையான காலப்பகுதியில் குடல் புற்றுநோய் காரணமாக 88 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 7 பேர் இறந்துள்ளனர். இரைப்பைப் புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளனர். ஈரல் புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் இறந்துள்ளனர். சுவாசாப் புற்றுநோயால் 67 பேர் பாதிக்கப்பட நிலையில் 8 பேர் இறந்துள்ளனர். மார்பகப் புற்றுநோயால் 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் இறந்துள்ளனர். கருப்பைப் புற்றுநோயால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் இறந்துள்ளனர். கருப்பைக் கழுத்துப் புற்றுநோயால் 48 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் இறந்துள்ளனர்.

மேலும் ஆண்களில் சிறுநீர்ப்பைப் புற்றுநோயால் 10 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குருதிப்பட்டி நோயால் 37 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆண்களில் முன்னாண் மற்றும் நரம்பியல் சார்ந்த புற்றுநேய்களால் 30 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தைரொய்டுப் புற்றுநோயால் 20 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.