இந்தியத் தேர்தலின் முதல் கட்ட வாக்களிப்பில் , வாக்கு விழுக்காடு அதிகரிப்பு

உலகின் மிகப் பெரிய அளவிலான ஜனநாயகத் தேர்தல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) தொடங்கியது. ஏழு கட்டங்களாக ஆறு வாரங்கள் நடைபெற உள்ள இந்தியத் தேர்தலின் முதல் கட்ட வாக்களிப்பில் தமிழ்நாட்டு மக்கள் உட்பட பல மாநிலத்தவர்கள் வாக்களித்தனர்.

இந்திய நேரம் இரவு 7 மணி தமிழ்நாட்டில் 72.9 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

இந்திய நாடாளுமன்றத்தின் 18வது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.

வாக்களிக்க அனுமதிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே மக்கள் வாக்குச் சாவடிகளில் வரிசை பிடிக்கத் தொடங்கினர். சில இடங்களில் வாக்களிப்பு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறினால் வாக்களிப்பு தாமதமானது. மணிப்பூர், மேற்கு வங்க மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் வாக்களிப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் பல இடங்களிலும் வெயில் கொளுத்தியபோதும் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர். சில கிராமங்களில் கோரிக்கைகள், பிரச்சினைகளை முன்வைத்து மக்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தனர்.

முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்றது. மொத்தம் 187,000 வாக்குச்சாவடிகளில் 166.3 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

இந்தியாவில் வாக்களிப்பது கட்டாயமில்லாத நிலையில், கடந்த தேர்தல்களைவிட இத்தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாக வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் 67.4 விழுக்காட்டினர் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் 72.46 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறும். 1.8 மில்லியனுக்கும் அதிகமான தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 970 மில்லியன் இந்திய மக்கள், அதாவது உலக மக்கள்தொகையில் 10 விழுக்காட்டு மக்கள் இந்தியாவின் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படும்.

உலகமே உன்னிப்பாகக் கவனிக்கும் இந்தத் தேர்தல் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் எதிர்பார்ப்பிலுள்ள மோடி அரசாங்கம், மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கிவிட்டது.

மோடி வெற்றி பெற்றால், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் இரண்டாவது இந்தியப் பிரதமர் எனும் சிறப்பை மோடி பெறுவார்.

முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியாகக் களமிறங்கியுள்ள, காங்கிரஸ் கட்சியுடன் பலமிக்க மாநில கட்சிகள் இணைந்த இண்டியா கூட்டணியும் பல மாநிலங்களில் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மோடியும் அவரது பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி பெறும் என்று கணிக்கின்றன.

“இந்தத் தேர்தல் இந்தியாவை உலகத்தில் பெரும் சக்திவாய்ந்த நாடாக உருவாக்குவதற்கான தேர்தல். உலகில் போர்ச்சூழல் மிகுந்துவரும் நிலையில், இந்தியாவில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றும் அரசு இருக்க வேண்டியது அவசியம். அந்த மாதிரியான ஒரு நேரத்தில், ஒரு வலுவான அரசாங்கம் நாட்டின் தேவை. அதுபோன்ற அரசாங்கத்தை முழுப் பெரும்பான்மையுடைய பாரதிய ஜனதா அரசாங்கத்தால் மட்டுமே வழங்க முடியும்,” என்று மத்திய பிரதேசத்தின் டாமோ என்ற இடத்தில் தனது தேர்தல் பிரசாரத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

“ஒரு மொழி, ஒரே கலாசாரம், ஒரே அமைப்பு, ஒரே விதமான உணவைத் திணிக்கும் பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்,” என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.