எட்கா ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுகின்ற ஏற்பாடுகள் இரகசியமாக முன்னெடுப்பு – விமல் எம்.பி. குற்றச்சாட்டு.

“இலங்கையின் இறையாண்மையை இந்தியாவுக்குக் காட்டிக்கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள் தயாராகி வருகின்றனர். எட்கா உடன்படிக்கையைக் கைச்சாத்திடுவதற்குரிய ஏற்பாடுகளும் இரகிசயமாக இடம்பெறுகின்றன.”

இவ்வாறு உத்தர லங்கா சபாகயவின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

அத்துடன், இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பிக்க மக்கள் உத்தர லங்கா சபாகயவுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் விமல் வீரவன்ச எம்.பி. மேலும் கூறியதாவது:-

“இலங்கையில் என்றுமில்லாதவாறு பொருளாதார கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களை விற்பனை செய்யும் நிலை காணப்படுகின்றது. இலங்கை மின்சார சபையை 12 கூறுகளாகப் பிரித்து இந்திய நிறுவனங்களுக்கு விற்பதற்குத் தயாராகின்றனர்.

இலங்கையையும், இந்தியாவையும் இணைப்பதற்குரிய பாதை பற்றியும் பேசப்படுகின்றது. விமான நிலையங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு வழங்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளார். இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும். அதேபோல இலங்கை மற்றும் இந்திய சுங்கங்களை இணைப்பதற்குரிய சாத்தியம் பற்றியும் பேசப்படுகின்றது.

இவ்வாறு இலங்கையை இந்தியாவின் மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இது நாட்டின் இறையாண்மையைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும்.

எட்கா உடன்படிக்கையின் உள்ளடக்கங்கள் கோரப்பட்டாலும் அவை வழங்கப்படுவதில்லை. இரகசியமான முறையில் உள்ளடக்கங்கள் இடம்பெற்று வருகின்றன.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.