ஐக்கிய மக்கள் சக்தி சட்டபூர்வமானதா? – சிறந்த சட்டத்தரணிகளைத் தயார்ப்படுத்துங்கள் என எதிரணியினருக்கு காஞ்சன ‘அட்வைஸ்’.

“இலங்கைப் பிரஜை அல்லாத டயனா கமகேவினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சட்டபூர்வமானதா? நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியின் வேட்புமனுவில் அவர் கையெழுத்திட்டிருந்தாலோ, தற்போதைய கட்சி செயலாளருடன் அவர் உடன்படிக்கையைச் செய்திருந்தாலோ அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். எனவே, சிறந்த சட்டத்தரணிகளை எதிரணியினர் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (08) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைச் சவாலுக்குட்படுத்தப் போவதில்லை. ஆனால், தற்போது புதிய பிரச்சினையொன்று எழுந்துள்ளது. டயனா கமகே இலங்கைக் பிரஜாவுரிமை அற்றவர் என்பதால் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. இங்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைக்கு அவரே கைச்சாத்திட்டுள்ளார்.

ஆகவே, ஐக்கிய மக்கள் சக்தி சட்டபூர்வமானதா? என்ற பிரச்சினை எழும். அவரே கட்சியை இவர்களிடம் கொடுத்துள்ளார். அவர் அந்தக் கட்சியைப் பதிவு செய்யும்போது அவர் இலங்கைப் பிரஜையாக இல்லாமலே இருந்துள்ளார். இந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்லாத ஒருவருக்குக் கட்சியைப் பதிவு செய்ய முடியாது.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவிலும் அவரா கையெழுத்திட்டார் என்பதும் தெரியாது. அப்படி அவர் கையெழுத்திட்டிருந்தால் அது தொடர்பாகக் கவனம் செலுத்தலாம். எதிரணியின் உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்ற உணவகத்தில் கதைக்கும்போது மிகவும் குழப்பத்தில் இருப்பது போன்றே இருந்தது.” – என்றார்.

இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி.,

“கட்சி பதவிகள் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதில் பிரச்சினைகள் கிடையாது.” – என்றார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் உரையாற்றிய அமைச்சர் காஞ்சன விஜேசேகர,

“அப்படியில்லை, இப்படி இல்லை என்று கூறினாலும் இது நீதிமன்றம் செல்லும் பிரச்சினையாகும். நீதிமன்றத்தில் அது தொடர்பில் கூற வேண்டி வரும்.

வேட்பு மனுக்களில் யார் கையெழுத்திட்டது என்றும் பரிசோதிக்க வேண்டி வரும்.

இதனால் விவாதங்களுக்கு நேரத்தைச் செலவிடுவதை விடுத்து, இந்த விடயத்துக்கு முகம்கொடுப்பதற்குத் தயாராகுங்கள்.

உங்களுக்கு இந்த விடயத்தில் ஏதோவொரு பிரச்சினை உள்ளது. அவ்வாறு நடக்கக்கூடாது என்றே பிரார்த்திக்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.