சூப்பர் ஒவரில் ரோயல் சலேஞ்சஸ் அணி வெற்றி வாகை சூடியது.

நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, களத்தடுபை தேர்வு செய்தார். மும்பை அணியில் சவுரப் திவாரிக்குப் பதில் இஷான் கிஷான் இடம் பெற்றார். பெங்களூரு அணியில் பிலிப், ஸ்டைன், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு ஆடம் ஜாம்பா, இசுரு உதனா, குர்கீரத் சிங் சேர்க்கப்பட்டனர்.

பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிக்கல், பின்ச் துவக்கம் கொடுத்தனர். பின்ச், ஐ.பி.எல்., தொடரில் 14வது அரைசதம் அடித்தார். 35 பந்தில் 52 ரன் எடுத்த இவர், போல்டின் ‘வேகத்தில்’ சரிந்தார். கோஹ்லி 3 ரன் எடுக்க, தேவ்தத் படிக்கல் 54 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. துபே (27), டிவிலியர்ஸ் (55) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடின இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ரோகித் (8), சூர்யகுமார் (0) ஒற்றை இலக்கில் திரும்பினர். குயின்டன் டி காக் 14, ஹர்திக் பாண்ட்யா 15 ரன் எடுத்தனர். இஷான் கிஷான், போலார்டு அரைசதம் எட்டினர்.

உதனா வீசிய கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டன. முதல் இரு பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டன. 3, 4வது பந்தில் 2 சிக்சர் அடித்த இஷான் கிஷான் (99) 5வது பந்தில் அவுட்டானார். கடைசி பந்தில் போலார்டு, பவுண்டரி அடிக்க, போட்டி ‘டை’ ஆனது.மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன் எடுத்தது. போலார்டு (60) அவுட்டாகாமல் இருந்தார்.

வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. நவ்தீப் சைனி பந்து வீசினார். முதல் 4 பந்தில் ஒரு பவுண்டரி உட்பட 6 ரன் எடுக்கப்பட்டன. 5வது பந்தில் போலார்டு (5) அவுட்டானார். அடுத்த பந்தும் வீணாக (1 உதிரி), மும்பை அணி 7 மட்டும் ரன் எடுத்தது.8 ரன் எடுத்தால் வெற்றி என பெங்களூரு களமிறங்க, பும்ரா பந்து வீசினார். முதல் 3 பந்தில் 2 ரன் கிடைத்தது. 4வது பந்தில் பவுண்டரி அடித்த டிவிலியர்ஸ் (6), அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தார். கடைசி பந்தில் கோஹ்லி (5) பவுண்டரி அடிக்க, பெங்களூரு (11 ரன்) வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.