10 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் சிங்கப்பூரில் மீண்டும் நேரடி இசை நிகழ்ச்சி படைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கிரேட்டஸ்ட் ஹிட்ஸ் ஆஃப் ஏ.ஆர்.ரகுமான்’ எனப்படும் அந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 31ஆம் தேதி தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும்.

இஸ்தாரா ஜுவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளருக்குச் சொந்தமான மேஸ்ட்ரோ புரோடக்‌ஷன்ஸ் ஊடகத் தயாரிப்பு நிறுவனத்தின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இந்நிகழ்ச்சி குறித்த சுருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

அந்நிறுவனமும் அன்யூஷுவல் எண்டர்டெய்ன்மண்ட் நிறுவனமும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்குவதாக மேஸ்ட்ரோ புரோடக்‌ஷன்ஸ் செவ்வாய்க்கிழமை (மே 20) வெளியிட்ட போஸ்டர் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் விரைவில் விற்பனைக்கு விடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் வருகைக்கான எதிர்பார்ப்பு இங்குக் கூடியுள்ளது. அவரது இசை நிகழ்ச்சி குறித்த மேஸ்ட்ரோ புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அறிவிப்பு வெளியான 15 மணி நேரத்தில் அப்பதிவுக்கு 24,000க்கும் அதிகமான விருப்பக்குறிகளும் 240க்கும் மேற்பட்ட கருத்துகளும் கிடைத்துள்ளன.

இதற்கு முன்னர் ஏ.ஆர்.ரகுமான் சிங்கப்பூரில் 2005, 2011, 2014ஆம் ஆண்டுகளில் மூன்று முறை இசை நிகழ்ச்சி படைத்துள்ளார். கடைசியாக 2014ல் படைத்த நிகழ்ச்சி கரையோரப் பூந்தோட்டங்களில் அரங்கேறியது.

சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு ஜூலை 27ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் தேசிய விளையாட்டரங்கில் ஏ.ஆர்.ரகுமான், 57, இசை நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளார்.

மலேசியாவில் 98 மலேசிய ரிங்கிட் முதல் 1,288 ரிங்கிட் வரை நுழைவுச்சீட்டுக் கட்டணம் இருக்கும் நிலையில், சிங்கப்பூர் நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விலை என்னவாக இருக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

பத்தாண்டுகளுக்குப் பின் அவர் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி படைக்கவுள்ளதை அடுத்து, அவரை வரவேற்கும் விதமாகவும், பாடல் விருப்பங்களையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

ஏ.ஆர்.ரகுமானின் அதிதீவிர ரசிகையான ஆசிரியை சரினா பானு, 45, தனது மகன் ஜூலியஸ் ஷெனுவலுடன் இணைந்து கோலாலம்பூரில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் சிங்கப்பூர் நிகழ்ச்சி அறிவிக்கப்படும் முன்பே தாம் அதற்கு முன்பதிவு செய்துவிட்டதாகக் கூறிய அவர், வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இது இருக்கும் எனும் எதிர்பார்ப்பில் குதூகலத்துடன் காத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி படைப்பது மகிழ்ச்சி என்றும் அது சிங்கப்பூர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் அவர் சொன்னார்.

“பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த வாய்ப்பு! ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடக்கவிருப்பதால் உண்மையிலேயே எனக்குத் தூக்கம்கூட வரவில்லை! ஆகஸ்ட் 31ஆம் தேதிக்காக காத்திருக்கிறேன்,” என்று கூறினார் 23 வயது பாலர் பள்ளி ஆசிரியர் பிரியாதர்ஷினி பரம்மேஷ்வரன்.

Leave A Reply

Your email address will not be published.