தொழிற்சங்கப் போராட்டக் காலத்தில் மருத்துவபீட புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கு யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் எதிர்ப்பு.

பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டக் காலத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் யாழ். போதனா வைத்தியசாலையுடன் இணைந்த புதிய கட்டடத் தொகுதியின் திறப்பு விழாவுக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் த.சிவரூபன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

“பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள உயர்வு மற்றும் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எமது தொழிற்சங்கப் போராட்டமானது இம்மாதம் 2ஆம் திகதி நண்பகல் முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இன்றி சகல பல்கலைக்கழகங்களும் செயற்படாது இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் எமது கோரிக்கைகளைத் தீர்த்துவைத்தலில் எவ்வித அக்கறையுமற்று காலங்கடத்தப்படுகின்றது.

இருந்தபோதிலும் இவ்வேளையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் யாழ். போதனா வைத்தியசாலையுடன் இணைந்த புதிய கட்டடத் தொகுதியானது இன்று (24) ஜனாதிபதி, கல்வி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திறந்துவைக்கப்பட்டமையை யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டிப்பதோடு இந்தச் செயற்பாடு எமது தொழிற்சங்கப் போராட்டத்தை மலினப்படுத்தும் செயற்பாடாகக் காணப்படுகின்றமையால் அதனை எதிர்த்து யாழ். பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவபீடம் என்பவற்றின் வாயிலில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டதோடு, பிரதான வளாக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் இன்று காலை 10.30 மணியளவில் நடத்தியிருந்தோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.