கங்கையா? சாக்கடையா? தமிழக மக்களின் தலைவிதி?

தண்ணீர் என்பது ஒன்று தான்.

அது சாக்கடையாவதும், கங்கை நீராவதும், செல்லும் அல்லது சேரும் இடத்தைப் பொறுத்தது.

குறிப்பாக ஆட்சிப் பணி என்பதும், அரசு பதவிகள் என்பதும் , அதேபோலத்தான்.

எப்படியான அரசியல்வாதிகளாக இருந்தாலும் , அவர்களோடு சிறந்த அதிகாரிகள் சேரும்போது , அவர்களது ஆலோசனையால் அரசியல்வாதி மட்டுமல்ல , அந்த மாநிலமே சிறப்பாகிவிடுகிறது.

பதிலுக்கு சாக்கடை போன்ற அதிகாரிகள் சேரும்போது, அரசியல்வாதிகள் மட்டுமல்ல , அந்த மாநிலமும் சாக்கடையாக மாறிவிடுகிறது.

பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும் என முன்னோர்கள் சொன்னதும் அதையேதான். அதே பூ , கெட்டுப் போனதாக இருந்தால் மணக்காது , நாறிடும்.

தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கூத்தப்பட்டி என்ற சிற்றூரில் பிறந்து, இன்று ஒரிசா மாநிலத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் வி.கே.பாண்டியன் பூவோடு சேர்ந்த நாரையும் வாசமாக்கி , கங்கையாக மிளிர்ந்து , சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.

ஆனால் சிறப்பாக செயல்பட வேண்டிய, வளமான தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கி, நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கி, சுய லாபத்திற்காகவும், சுகபோகத்திற்காகவும் நாசமாக்கி வரும் நிதித்துறை முதன்மை செயலர் உதயச்சந்திரன் அதற்கு நேர்மாறாக இருக்கிறார் .

ஐஏஎஸ் அதிகாரிகள் என்னதான் செய்து விட முடியும்? ஆட்சியாளர்கள் சொல்வதைத் தானே செய்ய முடியும்? என பலர் கேட்கலாம்.

ஆட்சியாளர்களுக்கு கல்வித் தகுதியே தேவையில்லை. இன்னும் புரியும்படி சொல்வதானால் ”அந்த கருமத்துக்கு படிப்பே தேவையில்லக்கா” என்று கவுண்டமணி அழகாக நக்கல் அடித்திருப்பார்.

அதுபோல படிப்பறிவே இல்லாத, மாநிலத்தின் டேட்டா எதையும் தெரிந்து கொள்ளாத ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை சொல்லி வழிகாட்டியாக இருந்து, ஆட்சிப் பணிகளை நிர்வகித்து மேம்படுத்துவது தான் ஐஏஎஸ் படித்த அதிகாரிகளின் பணி, பொறுப்பு. அதற்காகத் தான் முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் தலைமைச் செயலர் தொடங்கி அனைத்து துறைகள், நிர்வாக ஆணையரகங்கள், மாநகராட்சிகள் என எல்லா இடங்களிலும் தலைமைப் பொறுப்பை , ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

இவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, கடமையை சரியாகச் செய்தால் மிகப் பெரிய உயரத்திற்கு செல்லலாம் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டாக திகழ்பவர், ஒரிசா மாநிலத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் வி,கே. பாண்டியன்.

வேற்று மொழி பேசும் ஒரிசா மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டாலும், அங்குள்ள மொழியைக் கற்று, அந்த மாநில மக்களைப் புரிந்து, நிலப்பரப்பையும் வளங்களையும் உணர்ந்து உண்மையாக உழைத்தார். முதலமைச்சரின் அருகில் அமர்ந்தார், இன்று மக்களின் மனதிலும் அமர்ந்து விட்டார்.

ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆரத்தி எடுப்பது, காலில் விழுவது, கண்ணீரோடு நன்றி சொல்வதெல்லாம் திரைப்படத்தில்தான் நடக்கும் என்பதை உடைத்து, சக வாழ்வியலிலும் , அதையும் சாத்தியமாக்கி யதார்த்தமாக்கி இருக்கிறார் வி,கே. பாண்டியன்.

அதே ஐஏஎஸ் பணி.

அதே தலைமைப் பொறுப்பு.

ஆனால் தனது பொறுப்பை மறந்து, மக்களின் நலனை காலில் போட்டு மிதித்து, ஆட்சியாளர்களை எப்படியோ கைக்குள் போட்டுக்கொண்டு ஆடத்தெரியாதவன் மேடையேறி பரதநாட்டியம் ஆடுவது போல தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறார் இன்னொரு ஐஏஎஸ் அதிகாரியான உதயச்சந்திரன்.

ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு, தான் சார்ந்த துறை மீது பற்றுதலும், திறமையும் இருக்க வேண்டும். ஆனால், முதன்மைச் செயலராக பதவி வகிக்கும் உதயச்சந்திரனுக்கு இவற்றில் திறமை இருக்கிறதோ, இல்லையோ, ஆட்சியாளர்களை எப்படியோ சரிகட்டி, அவர்களை தன்வசம் இழுத்து, அதிகாரத்தை தன் விருப்பம் போல பயன்படுத்தி வாழ்க்கையை அனுபவிப்பது என்பதில் மட்டும் திறமை மிகுந்துள்ளது.

இவரது தவறான போக்கு, திறமையற்ற செயலாக்கங்கள், சீர்கெட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை முதல்வர் எப்படித்தான் கண்டும் காணாமல் இருக்கிறார் என்பது தான், நிதித்துறை வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் அதிகாரிகளின் கவலையாக உள்ளது.

ஏற்கனவே போதை, சமூக விரோத செயல்களால் தறிகெட்டு சென்றுகொண்டிருக்கும் தமிழகம், நிதி நெருக்கடியிலும் திண்டாடுகிறது. இதற்கு முழுமுதல் காரணம், உதயச்சந்திரன்தான் என்று அநேக வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்களுக்காக மேற்கொள்ளும் எந்த ஒரு நல்ல நடவடிக்கைக்கும் எதிராக, சிகப்புக் கொடி காட்டி, தன்னைத் தாண்டி எதுவும், எங்கும் சென்றுவிடக்கூடாது என்பதில் மட்டுமே குறியாக இருப்பதோடு, நல்ல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டையாக உள்ளார்.

இது இப்படியே தொடர்ந்தால்…

உதயச்சந்திரன் புண்ணியத்தால் தமிழ்நாடு , குட்டி சுவராகுவதை எவராலும் தடுக்க முடியாது.

– உதயன்

Leave A Reply

Your email address will not be published.