இலங்கையின் முதலாவது இளைஞர் உதைபந்தாட்ட லீக்கிற்கு ‘லைக்கா’ அனுசரணை.

இலங்கை கால்பந்தாட்டத்தின் எதிர்காலத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட பல இலக்குகளை முன்வைத்து 19 வயதுக்குட்பட்ட இளைஞர் உதைபந்தாட்ட போட்டியை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதற்கான பிரதான அனுசரணையை Lyca Gnanam Foundation வழங்குவதுடன், தொடர்ந்து 03 வருடங்களுக்கு இந்த அனுசரணையை வழங்க தீர்மானித்துள்ளனர்.

’19 வயதுக்குட்பட்ட இளைஞர் கால்பந்து லீக்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போட்டி, இந்நாட்டில் நடைபெறும் முதல் யூத் லீக் என வரலாற்றில் இடம் பெறும்.

போட்டிகள் தொடர்பில் அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு கடந்து 27ம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றதுடன், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் போட்டிகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் அலிராஜா சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், எதிர்காலத்தில் இளைஞர் யுவதிகளுக்கான லீக் போட்டியை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த கூட்டுறவின் முதல் கட்டம் 3 வருட காலத்திற்கு செயற்படும் எனவும், அது தொடர்ந்தும் செயற்படும் எனவும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும், இந்தப் போட்டிக்காக 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்படும் என நம்புவதாக ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

ஜூலை முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு வார இறுதியிலும் இந்தப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, நாட்டின் 55 முக்கிய நகரங்களை உள்ளடக்கிய 440 அணிகளைச் சேர்ந்த 11,000 வீரர்கள் போட்டியிட உள்ளனர். மேலும், 2,500 விளையாட்டு கழக நிர்வாகிகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் இதற்காக இணைய உள்ளனர்.

இங்கு முதற்கட்ட சுற்றுப் போட்டிகள் மாவட்டப் போட்டிகளாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வெற்றி பெறும் அணி (24 அணிகள்) இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும்.

மாவட்டப் போட்டிகள் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டிகளும் அதே லீக் முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 20 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கால்பந்து தொடரில் நுழைவதற்கான வாய்ப்பாகவும் இந்த போட்டி அமையும் என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் ஒரு தகவலை வெளியிட்டார். இப்போட்டிக்கு ஆசிய வலயத்திலிருந்து 06 அணிகளுக்கே பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த போட்டியின் வெற்றியின் பிரகாரம் எதிர்காலத்தில் 16 வயதுக்குட்பட்ட போட்டிகளை நடத்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.