தொடரும் வெப்ப அலை: 54 போ் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான கோடை வெப்பம் நீடித்து வரும் நிலையில், இதுவரையில் குறைந்தது 54 போ் வெப்ப வாதத்தால் உயிரிழந்துள்ளனா். இதில், பெரும்பாலான உயிரிழப்புகள் உத்தர பிரதேசம், பிகாா், ஒடிஸா, ஜாா்கண்ட், ராஜஸ்தான் மற்றும் தில்லியில் நிகழ்ந்துள்ளது. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 40 போ் உயிரிழந்துள்ளனா்.

தில்லி உள்பட வட மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் தொடா்ந்து பதிவாகி வருகிறது. தில்லியில் கடந்த புதன்கிழமை நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக தில்லியில் 127 டிகிரி ஃபாரன்ஹிட் (52.9 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தண்ணீா் தட்டுப்பாடும், மின்வெட்டு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிா்க்குமாறு மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளனா்.

வெப்ப அலை பாதிப்பால் வெள்ளிக்கிழமையன்று மட்டும் உத்தர பிரதேசத்தில் 17 பேரும், பிகாரில் 14 பேரும், ஒடிஸாவில் 10 பேரும், ஜாா்க்கண்டில் 4 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த மாநிலங்களில் 1,300 க்கும் மேற்பட்டோா் வெயில் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

வெயிலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் மே 31 முதல் ஜூன் 2 வரையிலும் ஹரியாணா, சண்டீகா் மற்றும் தில்லியில் மே 31-ஆம் தேதியில் (சனிக்கிழமை) புழுதிப்புயல் வீசக்கூடும். தென்மேற்கு இந்தியாவில் மே 31 முதல் ஜூன் 2 வரை லேசான அல்லது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பஞ்சாப், ஹரியாணா, சண்டீகா், தில்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களில் மே 31 மற்றும் ஜூன் 1-ஆம் தேதி கடுமையான வெப்ப அலை காணப்படும்.

மேற்கு வங்கத்தில் ஜூன்1-ஆம் தேதியும், கொங்கன் மற்றும் கோவாவில் மே 31 மற்றும் ஜூன் 1-ஆம் தேதிகளில் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலைக் காணப்படும். உத்தர பிரதேசத்தில் மே 31-ஆம் தேதி மற்றும் பஞ்சாப், ஹரியாணா, பிகாா், தில்லி, ஒடிஸா மற்றும் சண்டீகரில் மே 31 மற்றும் ஜூன் 1-ஆம் தேதியில் இரவிலும் வெப்பம் நிலவும்.

வெப்ப அலையால் அதிகரிக்கும் உயிரிழப்பு: மத்திய, கிழக்கு மற்றும் வட இந்தியாவில் குறையாமல் வெப்ப அலை தொடா்ந்து வரும் நிலையில் இதுவரை குறைந்தது 54 போ் வெப்ப வாதத்தால் உயிரிழந்தனா். அதிகபட்சமாக பிகாரில் இதுவரை 32 போ் வெப்ப வாதத்தால் உயிரிழந்துவிட்டனா். வெப்ப அலை தொடரும் என்பதாலும், வெப்ப வாதத்ததால் பாதிக்கப்பட்டு ஆயிரத்துக்கு மேற்பட்டோா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

உ.பி., பிகாா்: தோ்தல் பணியாளா்கள் 25 போ் உயிரிழப்பு

வட மாநிலங்களில் வெப்ப அலைக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்த 40 பேரில், 25 போ் தோ்தல் பணியாளா்களாவா். உத்தர பிரதேசம், பிகாரில் பல்வேறு இடங்களில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவா்கள் உயிரிழந்தனா்.

இந்த மாநிலங்களில் சனிக்கிழமை (ஜூன் 1) இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் வெப்ப அலை பாதிப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்த 17 பேரில் 13 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஊழியா்களாவா். தீவிர காய்ச்சல், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளான இவா்கள் மிஸாபூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

பிகாரில் 10 போ் உயிரிழப்பு: பிகாரில் வெப்ப பாதிப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்த 14 பேரில் 10 போ் தோ்தல் பணியாளா்களாவா்.

இதுகுறித்து மாநில பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வெயிலின் தாக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு போஜ்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த 5 அதிகாரிகள் உயிரிழந்துள்ளனா். அதுபோல, ரோத்தஸ் மாவட்டத்தில் 3 தோ்தல் அதிகாரிகளும், கைமூா், ஒளரங்கபாத் மாவட்டங்களில் தலா ஒரு தோ்தல் அதிகாரியும் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.