“சுமந்திரனின் ஊதுகுழல் நான் அல்லன்!” – சீ.வீ.கே. சீற்றம்.

“சுமந்திரனுக்கு நான் குழல் ஊதவில்லை. அவரின் ஊதுகுழல் நான் அல்லன். என்னைக் கேட்டுத் தமிழ்ப் பொது வேட்பாளர் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு தொடர்பில் சுமந்திரன் பேசவில்லை.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்பாடு செய்துள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் சாதக – பாதக நிலைமைகள் தொடர்பில் ஆராயும் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு என்பது சதி நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இவ்வாறு கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவதாக ஊடகங்களில்தான் நானும் பார்த்தேன். எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. என்னுடன் எதுவும் சுமந்திரன் கதைக்கவும் இல்லை. இது தொடர்பில் எதுவும் சொல்லவும் இல்லை.

ஆனால், ஊடகங்களில் பார்த்தபோது இரண்டு தரப்பு கருத்துக்களும் பகிரப்படுவதாகத்தான் இருக்கின்றன. அப்படிச் செய்யலாம்தானே. எந்தவொரு விடயத்துக்கும் இரண்டு பக்கக் கருத்துக்கள் இருக்கும். இது இரண்டு அணிகள் என்றில்லை. இரு வேறு கருத்துக்கள் – நிலைப்பாடுகள்தான் இருக்கின்றன.

மேலும், அப்படி அணிகள் என்றால் எங்கள் கட்சிக்குள்தான் இருக்கின்றன. இந்த விடயத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கூட தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றனர். அது தவறு என்று சொல்லவில்லை. அவ்வாறு தங்கள் தங்கள் கருத்துக்களை சொல்வது அவர்களது உரிமை.

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் சாத்தியமற்றது என்று நான் முதலிலேயே சொல்லிவிட்டேன். அப்படி நான் கூறிப் பல நாட்களின் பின்னர்தான் சுமந்திரன் கூட இந்தக் கருத்தைக் கூறியிருந்தார். ஆனால், இப்போது நான் இதனைக் கூறினால் சுமந்திரன் சொல்வதை நான் கூறுவதாகவும், சுமந்திரனின் ஊதுகுழல் என்றும் என்னைச் சொல்லுவார்கள்.

ஆனால், உண்மை அதுவல்ல. நான் அவருக்குக் குழல் ஊதவில்லை. அதேநேரம் என்னைக் கேட்டும் தமிழ்ப் பொது வேட்பாளர் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு தொடர்பில் சுமந்திரன் பேசவும் இல்லை. அவருடைய கருத்தோ, என்னுடைய கருத்தோ எதுவாகவும் இருக்கலாம். அதேநேரம் மக்களின் கருத்து மாறுபட்டும் இருக்கலாம். அதற்காகக் கருத்து வேறுபாடுகள் இல்லாமலும் இல்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.