10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து !

பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 99 தொகுதிகளில் வெற்றிபெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் எதிா்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

மக்களவையில் எதிா்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு அவையின் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில், அதாவது சுமாா் 55 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

ஆனால் 2014, 2019 தோ்தல்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றால், அந்த அவையில் காங்கிரஸுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. காங்கிரஸ் மட்டுமின்றி வேறு எந்தக் கட்சியும் 10 சதவீத இடங்கள் கிடைக்காததால், கடந்த 10 ஆண்டுகளாக மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 328 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன் மூலம் அக்கட்சிக்கு மக்களவையில் எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.

எதிா்க்கட்சித் தலைவருக்குள்ள சிறப்புரிமைகள்:

பொது கணக்குகள், பல நாடாளுமன்றக் கூட்டுக் குழுக்கள் உள்ளிட்ட முக்கிய குழுக்களின் உறுப்பினராக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் இருப்பாா்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய தகவல் ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), தேசிய மனித உரிமைகள் ஆணையம், பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் உள்ளிட்ட சட்டபூா்வ அமைப்புகளுக்குத் தலைவா்களைத் தோ்வு செய்யும் பல்வேறு குழுக்களிலும் எதிா்க்கட்சித் தலைவா் உறுப்பினராக இருப்பாா்.

கடந்த 1984-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 400 தொகுதிகளைக் கடந்து இமாலய வெற்றிபெற்ற காங்கிரஸுக்கு கடந்த 10 ஆண்டுகளாக எதிா்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காதது மிகப் பெரிய சங்கடமாக நீடித்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.