விஜயபிரபாகரன் தோற்கவில்லை; திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளார்: பிரேமலதா.

“விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை,” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “கேப்டன் இல்லாத சோகம் இன்னும் எங்களை விட்டு நீங்கவில்லை. கேப்டன் நினைவில் இருந்து மீளவில்லை என்பதால் விஜயபிரபாகரன் தேர்தலில் நிற்கவில்லை என்று தான் முதலில் கூறினார். நிர்வாகிகளின் அன்புக்கட்டளையை ஏற்றே விருதுநகரில் போட்டியிட்டார். தேர்தலில் கடைசிவரை அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை.

“விஜய பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்று ஏன் கூறுகிறேன் என்றால், சூழ்ச்சியால் அவர் வீழ்த்தப்பட்டுள்ளார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும், ஊடகங்களில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக அங்கிருக்கும் அதிகாரிகளே சொல்கிறார்கள்.

“அங்கு ஆட்சியர், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டு மணிநேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துகிறார். வாக்கு எண்ணிக்கை ஏன் நிறுத்தப்பட்டது?. “பல்வேறு தரப்பிலும் இருந்து எனக்கு நிர்பந்தங்கள் அதிகமாக இருக்கிறது. என்னால் சமாளிக்க முடியவில்லை. போனை சுவிட்ச் ஆப் செய்யப்போகிறேன்,” என்று ஆட்சியர் வெளியே வந்து கூறுகிறார். அப்படியானால், ஆட்சியரை செயல்படவிடாமல் தடுத்தது யார்?

“தேர்தல் முடிவை அறிவிக்கும் முன்னதாகவே, முதல்வர் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது என்கிறார். முதல்வர் அறிவிக்கும் முன்னர் நான்கு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. எதனை வைத்து முன்கூட்டியே வென்றுவிட்டோம் எனக் கூறினார் என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்,” என்றார் பிரேமலதா.

“ஏனென்றால், விருதுநகர் தொகுதியில் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பின்னிரவு ஒரு மணிக்கு மேல் தான் மாணிக்கம் தாக்கூர் அங்கு வெற்றிச் சான்றிதழை வாங்கினார். அப்படி இருக்கும்போது முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே வெற்றிபெற்றதாக அறிவித்தது எப்படி?

“கேடி ராஜேந்திர பாலாஜி தவறு நடப்பதாக அங்கேயே முறையிட்டார். தேமுதிக, அதிமுக நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என கோரினர். ஆனால், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மிரட்டும் தொனியில் காவல்துறையினரை இறக்கினர். இதனால் தான் விஜயபிரபாகாரன் தோல்வியில் சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார். “தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தைதான் நாட முடியும். விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும். எனினும், விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது தொடர்பாக தேமுதிகவிடமிருந்து எந்தப் புகாரும் இதுவரை கிடைக்கவில்லை,” என்று திரு சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.