T20 உலகக்கிண்ண கிரிகெட் : இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி.

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.அதன்படி, பார்படாசின் பிரிட்ஜ்டவுன் நகரில் இன்று நடைபெற்ற 17வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர்.டேவிட் வார்னர் 16 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில், அவுட் ஆனார். டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 34 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் மிச்சேல் மார்ஷ் 35 ரன்களிலும், மேக்ஸ்வெல் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் 11 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டாய்னஸ் 17 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் களமிறங்கினர்.

பிலிப் சால்ட் 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேப்டன் பட்லர் 28 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றது

Leave A Reply

Your email address will not be published.