இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் முன்னாள் அமைச்சர் தொடர்பு – ஞானசார தேரர் ஆணைக்குழுவில் சாட்சி

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பரப்புவதற்காக முன்னாள் அமைச்சர் ஒருவர் மத்திய கிழக்கில் இருந்து அரசியல் ரீதியான உதவிகளை பெற்று கொண்டதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேரர் குற்றஞ்சாட்டும் முன்னாள் அமைச்சரின் பெயரை குறிப்பிடுமாறு ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்த போதிலும் பெயரை குறிப்பிட மறுத்த தேரர், அதனை எழுத்துமூலம் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளதுடன், குறித்த அமைச்சருக்கும் வில்பத்து காடழிப்புக்கும் தொடர்பிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

சஹ்ரான் ஹாஷிமுடன், அப்துல் ராசிக் எனப்படும் நபர் காத்தான்குடி பிரதேசத்தில் தௌஹீத் ஜமாஅத் கிளையொன்றை நிறுவியதாகவும் தேரர் ஆணைக்குழுவில் கூறியுள்ளார்.

கிங்ஸ்பெரி ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி அஸ்துன் – சாரா தம்பதியினரின் திருமணத்துக்கு முன் நின்று செயற்பட்டவர் மேற்குறிப்பிட்ட அப்துல் ராசிக் எனவும் ஞானசார தேரர் சாட்சியமளித்துள்ளார்.

அத்துடன் ஐ.எஸ்.எஸ் அமைப்பின் இலங்கைக்கான கல்வி நிர்வாக பொறுப்பதிகாரியாக இஷாக் என்பவர் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.

இஷாக்கின் மூத்த சகோதரரான நிலாம் என்பவரே ஐ.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்து மரணமடைந்த இலங்கையின் முதலாவது நபரெனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

தேரர் தெரிவித்த விடயங்கள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதா என ஆணைக்குழு கேள்வி எழுப்பிய போது, இது தொடர்பாக புலனாய்வு பிரிவினருக்கு அறிவித்ததாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஞானசார தேரர் சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.