ஆம்ஸ்ட்ராங்கின் கடைசி 10 வினாடிகளை நினைவுகூர்ந்த சகோதரர்

பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது வாழ்க்கையின் இறுதித் தருணங்களை நினைவுகூர்ந்துள்ளார் அவருடைய சகோதரர் வீரமணி.

தலையைச் சுற்றி கட்டுப் போட்டிருந்த வீரமணி, கைகளில் அரிவாள்களுடன் தம் சகோதரரை நோக்கி தாக்குதல்காரர்கள் விரைந்தபோது, அவர் மூச்சுவிட முயன்றதை தாம் பார்த்ததையே ஆம்ஸ்ட்ராங் வாழ்வின் கடைசி 10 வினாடிகள் என வர்ணித்தார்.

தாக்குதல்காரர்கள் அறுவரில் இருவர் தம்மை தலையிலும் முதுகிலும் தாக்கியதில் தாம் காயமுற்றதாக காணொளி ஒன்றில் வீரமணி கூறினார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இரவு 7 மணியளவில் தாம் கோவிலில் இருந்தபோது கூச்சல் சத்தம் தமக்குக் கேட்டதாகச் சொன்ன வீரமணி, தம் சகோதரர் தாக்கப்படுவதை தாம் அறிந்ததாகக் கூறினார்.

கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த வீடு ஒன்றுக்கு அருகே ஆம்ஸ்ட்ராங் நின்றுகொண்டிருந்தபோது அவர் தாக்கப்பட்டார்.

“கூச்சல் சத்தம் கேட்டதும், சம்பவ இடத்தை நோக்கி நான் விரைந்தேன். அரிவாள்களுடன் மூன்று ஆடவர்கள் என்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டேன். அவர்களில் இருவர் என்னைத் தாக்க முயன்றபோது நான் நிலைதடுமாறி சாலையில் விழுந்தேன்.

“தாக்குதல்காரர்களில் ஒருவர் என்னைத் தலையிலும் முதுகிலும் தாக்கினார். நான் வலியில் தவித்தபோதிலும், என் சகோதரரை நோக்கி ஓடினேன். ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரைத் தூக்கிவிட முயன்றேன். எனினும், நானும் ரத்தம் இழந்ததால் எனக்கு மயக்கமாக இருந்தது,” என்றார் வீரமணி.

தாக்குதல்காரர்கள் அரிவாள்களுடன் தங்களை நோக்கி ஓடி வந்தபோது தம் சகோதரர் மூச்சுவிட முயன்றதை மட்டுமே தம்மால் கேட்க முடிந்ததாக வீரமணி நினைவுகூர்ந்தார்.

“அப்போது நான் குற்றவாளிகளைப் பார்க்கவில்லை. அந்த 10 வினாடிகளில் தாக்குதல்காரர்கள் என்னை நோக்கி விரைந்ததை மட்டுமே என்னால் கவனிக்க முடிந்தது,” என்றார் அவர்.

வீரமணி பின்னர் அவருடைய மனைவியால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.