போயஸ் கார்டன் வீடு குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்.

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ரஜினிகாந்த் வீட்டில் மரியாதை கொடுக்கவில்லை என்ற கோபத்தில்தான் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டினார் எனப் பலரும் காணொளிகளில் பேசி வந்த நிலையில், அந்த சர்ச்சைகளுக்கு விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் தனுஷ்.

கோலிவுட்டில் பிரபலமான முன்னணி நடிகராக விளங்குபவர் தனுஷ். திரையுலகில் நடிப்புடன் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர் உள்ளிட்ட பல பரிமாணங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் தனுஷ், போயஸ் கார்டன் வீட்டை தான் வாங்கியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தற்போது அது இணையத்தில் பரவி வருகிறது.

“ரஜினியின் வீட்டைப் பார்க்கவேண்டும் என சிறு வயது முதல் ஆசைப்பட்டு உள்ளேன். அப்போதிலிருந்து போயஸ் கார்டனில் சின்னதாக நாமும் எப்படியாவது ஒரு வீடு வாங்கிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

“எனது 16 வயதில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடித்தேன். அந்தப் படம் மட்டும் மக்களிடம் எடுபடாமல் போயிருந்தால் நான் எப்போதோ காணாமல் போயிருப்பேன்.

“நல்லவேளையாக அந்தப் படம் சிறந்த வெற்றிபெற்றது. அதன்பின்னர் 20 ஆண்டுகால கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசுதான் இந்தப் போயஸ் கார்டன் வீடு,’’ என்று கூறியுள்ளார் தனுஷ்.

“நான் யாருன்னு எனக்குத் தெரியும், என்னை படைத்த அந்த ஆண்டவனுக்கும் தெரியும். என் அம்மா அப்பாவுக்கும் தெரியும், என் பசங்களுக்கும் தெரியும், என் ரசிகர்களுக்கும் தெரியும்.

“முதல் படத்தில் இருந்தே ஏகப்பட்ட கிண்டல்கள், கேலிகள், அவமானங்கள், உருவக்கேலிகளைத் தாண்டித்தான் முன்னுக்கு வந்துள்ளேன். ஒல்லியாக, கறுப்பாக இருந்த என்னை, எப்படி நீங்கள் உங்களோடு இணைத்துக் கொண்டீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு ரசிகர்களாகிய நீங்கள் கொடுக்கும் கரவொலிதான் முக்கிய காரணம்,” எனக் கூறியுள்ளார் தனுஷ்.

Leave A Reply

Your email address will not be published.